ஏழைகளுக்கு ரூ.4 ஆயிரம்


ஏழைகளுக்கு ரூ.4 ஆயிரம்
x
தினத்தந்தி 13 Feb 2019 9:30 PM GMT (Updated: 13 Feb 2019 1:33 PM GMT)

விவசாய வளர்ச்சிக்கு வெகுகாலமாகவே மத்திய–மாநில அரசுகளின் ஆதரவுகரம் நீட்டப்படவில்லை என்ற நிலையில், இப்போது நாடாளுமன்ற தேர்தல் வருகிற சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் அதாவது, ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் அவர்கள் வங்கிக்கணக்கிலேயே செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

விவசாயிகள் கடனிலும், விளைச்சல் இல்லாத சூழ்நிலையிலும், விளைச்சல் இருந்தால் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்காத நிலையிலும், பெரும் இன்னலுக்குள்ளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தில், ஒன்றுமே இல்லாததற்கு, இது ஏதோ ஓரளவிற்கு உதவும் என்றவகையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துகொண்டிருந்தனர். ஆனால், இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்ட ஒருசில நாட்களிலேயே எல்லா சிறு, குறு விவசாயிகளும் இந்தத்திட்டத்தின் பயனை அடையமாட்டார்கள். நிறையப்பிரிவில் விவசாயிகளுக்கு இந்தத்திட்டத்தின் பலன் போய்ச்சேராது என்று அறிவித்திருக்கிறார்கள்.

வருமானவரி கட்டுபவர்கள் இந்த ரூ.6 ஆயிரத்தை பெறத்தகுதிபடைத்தவர்கள் அல்ல. அரசியல் அமைப்புப்படி பதவி வகிக்கும் கவர்னர்கள், தேர்தல் ஆணையர்கள் மற்றும் மத்திய–மாநில அரசுகளில் பணிபுரிபவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றுள்ள ஊழியர்கள் இந்தத்தொகையை பெறமுடியாது. முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரது குடும்பங்கள் இந்தத்தொகையை பெறமுடியாது. டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், கட்டுமான வல்லுனர்கள் போன்ற தொழிலில் உள்ளவர்கள் மற்றும் மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த உதவித்தொகை கிடையாது என்று அறிவித்திருந்தார்கள். ரூ.10 ஆயிரம் மாதபென்‌ஷன் வாங்குகிறவர்களுக்குக்கூட இந்த உதவித்தொகை கிடைக்காது என்றால், யாருக்குத்தான் கிடைக்கும் என்று எல்லோரும் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த 2010–ம் ஆண்டு முதல், அடமானம் இல்லாமல் சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வங்கிக்கடன் கிடைத்த வரம்பை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்தியது. ரிசர்வ் வங்கி இதில் எந்தவிலக்கும் அளிக்கவில்லை. சிறுகுறு விவசாயிகள் என்று மட்டும் அறிவித்துள்ளது. 

விவசாயத்தை பொறுத்தமட்டில், சிறு விவசாயிகள் என்றாலும் சரி, பெரிய விவசாயிகள் என்றாலும் சரி, இயற்கை இடர்பாட்டிலோ, விளைபொருட்களுக்கு விலை கிடைக்காவிட்டாலோ, எல்லோருமே ஒன்றுபோல பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசுகள் உதவிக்கரம் நீட்டும்போது பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் வழங்கவேண்டும். இது ஒட்டுமொத்த விவசாயிகளின் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. இந்தநிலையில், சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110–வது விதியின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வாழும் 35 லட்சம் ஏழை குடும்பங்களும், நகர்ப்புறங்களில் வாழும் 25 லட்சம் ஏழை குடும்பங்களும், ஆகமொத்தம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் இந்தஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதிஉதவியாக தலா ரூ.2 ஆயிரம் நிதிஉதவியை பெறும் திட்டத்தை வெளியிட்டுள்ளார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, கஜா புயலின் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்தல் காரணமாக தற்போது நிலவும் வறட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சியை அளிக்கும். ஆக, மத்திய அரசாங்க திட்டத்தின்கீழ் ரூ.2 ஆயிரமும், மாநில அரசு திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரமும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு கிடைக்கப்போகிறது என்பது நிச்சயமாக நல்ல செய்திதான்.

Next Story