ரபேல் விவகாரம்; யார் பிரசாரத்திற்கு வலு?


ரபேல் விவகாரம்; யார் பிரசாரத்திற்கு வலு?
x
தினத்தந்தி 15 Feb 2019 9:30 PM GMT (Updated: 15 Feb 2019 1:18 PM GMT)

பா.ஜ.க. அரசு மீது ரபேல் விமான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வீசிக்கொண்டிருந்தது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ராணுவத்திற்காக 126 ரபேல் விமானங்களுக்காக விடுத்த டெண்டரில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசோ ஏவியே‌ஷன் நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டு டெண்டரில் வென்றது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. 2015–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந்தேதி 126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை வாங்கப்போவதாக பிரதமர் நரேந்திரமோடி பிரான்சில் அறிவித்தார். அதன்பின்பு விலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில், 18 தயார்நிலை விமானங்களை டசோ நிறுவனத்திட மிருந்து வாங்கிக்கொண்டு, மீதி 108 விமானங்களை இந்தியாவில் மத்தியஅரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் லைசென்சு அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றநிலைப்பாடு எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது பா.ஜ.க. அரசில் அதற்கு மாறாக அம்பானி நிறுவனத்தோடு, டசோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பது பா.ஜ.க. அரசுமீது கூறப்படும் குற்றச்சாட்டாகும். இந்த விமான கொள் முதலில் பெரிய ஊழல் நடந்துவிட்டது. ஒவ்வொரு ரபேல் விமானத்தின் விலையும் 41.24 சதவீதம் உயர்ந்து விட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கவேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் கடந்த 1½ ஆண்டு களாக இந்த விவகாரம் குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி 157 பக்கங்களில் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் கடைசி நாளன்று இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைவிட, தற்போது 2.86 சதவீதம் குறைவான விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

9 சதவீதம் குறைவான விலையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ராணுவத்துறை கூறியது உண்மையல்ல’ என்று கூறப்பட்டுள்ளது. ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையைவிட, குறைவான விலைக்கு ரபேல் விமானத்தை வாங்கிவிட்டோம். இதில் ஊழல் ஒன்றும் இல்லை’’ என்று பா.ஜ.க. அரசாங்கம் தேர்தல் பிரசாரத்தில் மார் தட்டிக்கொள்ளலாம். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்போது இந்த ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் அரசாங்கமே உத்தரவாதம் தரவேண்டும் என்று வலியுறுத்தியது. இப்போது பா.ஜ.க. அரசாங்கம் அந்த உத்தரவாதத்தை பெறவில்லை. பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் வாக்குறுதி கடிதம் மட்டுமே அளித்தது. ஆனால் ஒப்பந்தத்தில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு சட்டஅங்கீகாரம் இல்லை. மாறாக டசோ நிறுவனம் ஒப்பந்தத்தை மீறினால் தீர்ப்பாயத்தை தான் நாடவேண்டும். பிரான்ஸ் அரசாங்கத்தை நாடமுடியாது. மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்போது ஒட்டுமொத்த மதிப்பில் 15 சதவீதம் வங்கி உத்தரவாதம் உள்பட 25 சதவீத தொகைக்கு செயல்பாடு மற்றும் நிதி உத்தரவாதம் வழங்க டசோ நிறுவனம் ஒப்புக்கொண்டது. இப்போது அதுபோன்ற ஒப்பந்தம் ஏதுமில்லை என்பது போன்ற அம்சங்களை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தங்களுக்கு சாதகமாக தேர்தல் பிரசாரத்திற்கு எடுத்துக்கொள்ளும். ஆக, இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ரபேல் விவகாரம் முக்கியமாக தலையெடுக்கும். இரு கூட்டணிகளுமே தங்கள் கையில் ரபேல் தொடர்பான தலைமை கணக்கு அதிகாரி அறிக்கையை ஆயுதமாக எடுத்துக்கொண்டு சொற்போர் நடத்துவார்கள். 

Next Story