மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது


மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-17T22:57:23+05:30)

இந்திய மக்களின் ரத்தமெல்லாம் கொதிக்கும் வகையில், ஒரு கொடூர சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது.

ந்திய மக்களின் ரத்தமெல்லாம் கொதிக்கும் வகையில், ஒரு கொடூர சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே காஷ்மீரில் பாகிஸ்தானும், பாகிஸ்தானின் ஆதரவும், உதவியும், அரவணைப்பையும் பெற்றுள்ள பயங்கரவாதிகளும் அடிக்கடி வாலாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் கொடிய செயல்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு கொடூர சம்பவம் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது. கொடும்பனியையும், அடர்ந்த காடுகளையும், பயங்கரவாதிகளின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2,547 வீரர்கள் 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். புலவாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனங்கள் வந்துகொண்டிருந்தபோது, ஆதில் அகமது தார் என்ற 20 வயது பயங்கரவாதி வெடிபொருள் நிரப்பிய ஒரு காரை ஓட்டிக்கொண்டு வந்து, அதில் ஒரு வாகனத்தின் மீது மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அந்த வாகனம் சின்னாபின்னமாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், வேறுசில வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 இளம் வீரர்கள் உள்பட 40 வீரர்கள் இந்த நாட்டுக்காக உயிரை இழந்துள்ளனர். மேலும் 44 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த நெஞ்சம் பதைக்கும் செயலை நாங்கள்தான் செய்தோம் என்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மார்தட்டிக்கொண்டிருக்கிறது.  இந்த கொடிய செயலை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. இதை சர்வதேச அளவில் கொண்டுசெல்வதோடு, பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.

இதுபோன்ற சம்பவங்களை உளவுப்பிரிவு திறமையாக செயல்பட்டு முன்கூட்டியே உஷார்படுத்தியிருந்தால் நிச்சயமாக தடுத்து இருக்க முடியும். ஆனால், காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகரும், இதே மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி.யாக பணியாற்றியவருமான தமிழ்நாட்டில் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படை தலைவராக இருந்த கே.விஜயகுமார் இந்த சம்பவம் குறித்து உளவு தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ஸ்ரீநகருக்கு 30 கி.மீட்டர் தூரத்திலேயே 100 முதல் 150 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறான் என்றால், வாகன சோதனையிலும், உளவு பிரிவு தகவலிலும் குறைபாடு இருந்திருக்கிறது. 

இதுமட்டுமல்லாமல், இந்த கொடூர செயலை செய்த ஆதில் அகமது தார் பாகிஸ்தானில் இருந்து வந்துவிடவில்லை. இதே புலவாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன். அங்கிருந்துதான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். இதையும் உளவு பிரிவோ, உள்ளூர் போலீசோ கண்டுபிடிக்கவில்லை. இதுபோன்ற குறைகளை களையவேண்டும். ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்கி பயங்கரவாத அமைப்புகளை வேரோடு அறுத்து எறியவேண்டும். இந்த கொடூர தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரின் வீரமரணத்திற்கு அஞ்சலி செலுத்திய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரு குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவர்கள் தியாகம் என்றென்றும் போற்றப்படும் வகையில் சொந்த ஊர்களில் நினைவு சின்னம் அமைக்கவேண்டும். இந்த இரு இளம் வீரர்களுக்கும் இந்தியா வீரவணக்கம் செலுத்துகிறது.

Next Story