மத்திய அரசாங்க திட்டங்களில் தமிழக அரசின் சாதனை


மத்திய அரசாங்க திட்டங்களில் தமிழக அரசின் சாதனை
x
தினத்தந்தி 18 Feb 2019 9:30 PM GMT (Updated: 2019-02-19T00:37:57+05:30)

மத்திய அரசாங்கத்தின் இரு திட்டங்களில், தமிழக அரசு மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான சாதனையை படைத்துள்ளது.

மத்திய அரசாங்கம் பல திட்டங்களை அறிவிக்கிறது. இதில் பெரும்பாலான திட்டங்கள் மாநில அரசாங்கங்களால்தான் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் ஒரு தொகையையும், மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு ஒரு தொகையையும் பங்கீடாக அளிக்கும். சில திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளும் ஒரு பங்கை அளிக்க வேண்டியதிருக்கும். அந்த வகையில், தற்போது மத்திய அரசாங்கத்தின் இரு திட்டங்களில், தமிழக அரசு மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான சாதனையை படைத்துள்ளது. இதில், ஒரு திட்டம் ‘அம்ருட்’ என்று அழைக்கப்படும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான திட்டமாகும். மக்களுக்கு நேரடியாக சிறந்த சேவைகளை வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு, 25–6–2015–ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் இந்தத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத்திட்ட காலம் 5 ஆண்டுகளாகும். வருகிற 2020–ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு இந்தத்திட்டம் முடிவடைய இருக்கிறது. 

தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள 12 மாநகராட்சிகள், 20 நகராட்சிகள், 1 பேரூராட்சி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு, மத்திய அரசின் பங்காக ரூ.3,833 கோடியே 56 லட்சமும், மாநில அரசின் பங்காக ரூ.1,747 கோடியே 16 லட்சமும், உள்ளாட்சிகளின் பங்காக ரூ.3,862 கோடியே 74 லட்சமாகவும் உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடிநீர் மேம்பாட்டு பணிகள், பாதாள சாக்கடை திட்டபணிகள், பூங்காக்கள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும். இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இந்தத்திட்டத்தின் செயல்பாடு மந்தமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 378 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு முதல் இடத்தில் இருக்கிறது. மேற்கு வங்காளம் 194 திட்டங்களை நிறைவேற்றி 2–வது இடத்தில் உள்ளது. குஜராத், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் முறையே 89, 68, 63 திட்டங்களை நிறைவேற்றியுள்ளன. மற்ற மாநிலங்களில் எல்லாம் மிகக்குறைவான திட்டங்களே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகம் பீடுநடை போடுவது நிச்சயமாக பெருமை அளிக்கிறது. 

இதுபோல, படித்து வேலையில்லாத இளைஞர்களுக்காக திறன் இந்தியா திட்டம் 2016–ம் ஆண்டு முதல் 2020–ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு நிறைவேற்றும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் வேலையில்லா இளைஞர்களுக்கு பல்வேறு திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை அளித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு 90 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டு, ஏதாவது ஒரு தொழிலில் அவர்கள் திறனை மேம்படுத்த பயிற்சியளிக்கப்படுகிறது. கடந்த 2018–ம் ஆண்டு நவம்பர் 30–ந் தேதி கணக்குப்படி, நாடு முழுவதும் 33 லட்சத்து 93 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதில் முதலிடத்தில் இல்லாவிட்டாலும், முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் 5–வது இடத்தில் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 106 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 950 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 73,231 இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த இரு திட்டங்களிலும் தமிழக அரசு சாதனை படைத்ததுபோல, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் சிறந்த சாதனை படைக்கவேண்டும்.

Next Story