மத்திய அரசாங்க பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு


மத்திய அரசாங்க பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-19T20:14:03+05:30)

தமிழ்நாடு முழுவதும் ஏன் கடைக்கோடி கிராமங்களில்கூட ஓட்டல்களில் சர்வர்வேலை, காவலாளிவேலை, பிளம்பர், தச்சுவேலை, மொசைக் பதிக்கும் வேலை, மின்சாரவேலை, கட்டிடவேலை என்று ஒருதொழில் பாக்கியில்லாமல், அனைத்து கீழ்மட்ட வேலைகளிலும் வடமாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை பார்க்க முடிகிறது.

இவர்களுக்கு சம்பளம் குறைவு, வேலைபார்க்கும் இடங்களிலேயே தங்கிவிடுவதால், தமிழர்களாக இருக்கும் தொழிலாளர்களைவிட அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். ஆகவே, எங்களுக்கு லாபம்தான் முக்கியம் என்று வேலை கொடுப்பவர்கள் கூறினாலும், தமிழக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுபோன்ற நிலைமை வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில்தான், இப்போது புதிதாக பல மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும்போது, பெரும்பான்மையான சதவீத பணிகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்கூட, 50 சதவீத பணிகளை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் மாநிலஅரசின் அதிகாரத்திற்கு உள்பட்ட பணிகளாகும். ஆனால் ரெயில்வே, தபால் இலாகா போன்ற மத்தியஅரசு பணிகளிலும், வங்கி மற்றும் பொது நிறுவனங்களின் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற விதி கிடையாது. பெரும்பான்மையான பணிகளில் அந்தந்த மாநிலங்களில் தாய்மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இப்போது சில ஆண்டுகளாக ரெயில்வே துறையை எடுத்துக் கொண்டால், மூலை முடுக்கெல்லாம் கீழ்மட்ட பணியாளர்கள், ஸ்டே‌ஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர்கள் போன்ற பல பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த பணியாளர்களை பார்க்கமுடிகிறது. தபால் இலாகா, வங்கி பணிகளிலும் இதே நிலைமைதான். 

கடந்த 2016–ம் ஆண்டில் தபால் துறையில் நடந்த எழுத்துதேர்வில்கூட அரியானா, மராட்டியம், பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் இருந்து விண்ணப்பித்து தேர்வான பலர் குறிப்பாக தமிழ்மொழியில், தமிழக இளைஞர்களைவிட அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்ததை காணமுடிந்தது. இதேபோல தற்போது ரெயில்வேயில் கேங்மேன், ஹெல்பர், பியூன், சமையல் உதவியாளர், டிராக்மேன் போன்ற கீழ்மட்ட பணிகளில் தேர்வான பெரும்பாலானோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த தேர்வுகளுக்கு எல்லாம் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக இருக்கும் நிலையில், எப்படி இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வானார்கள் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் வந்தது. இது உடனடியாக கவனிக்கப்படவேண்டிய ஒரு வி‌ஷயமாகும். இத்தகைய பாகுபாடு தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறக்கூடாது. இதுபோன்று பாரபட்சம் காட்டுவது தமிழ்நாட்டை தவிர, வடமாநிலங்களில் நடந்திருந்தால், அங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வேலைவாய்ப்பு பெற்றிருந்தால் இது பெரிய தேசிய பிரச்சினையாக ஆகியிருக்கும். எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். எனவே, மத்திய அரசாங்கம் இதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கான தேர்வுகள் குறிப்பாக வெளிமாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடக்கும்போது நியாயமான முறையில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில் நடத்தப்படவேண்டும் என்பதைத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

Next Story