யாரை கைகாட்டப்போகிறது தமிழகம்?


யாரை கைகாட்டப்போகிறது தமிழகம்?
x
தினத்தந்தி 21 Feb 2019 10:30 PM GMT (Updated: 21 Feb 2019 3:07 PM GMT)

17–வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த 2 வாரங்களுக்குள் எந்த நேரமும் வெளியிடப்படலாம்.

17–வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த 2 வாரங்களுக்குள் எந்த நேரமும் வெளியிடப்படலாம். இதையொட்டி, நாடு முழுவதும் கூட்டணிகளை அமைப்பதற்கான வேலை அரசியல் கட்சிகள் மத்தியில் மின்னல் வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாட்டை ஆளப்போவது மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியா?, ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியா? என்பது தான் நாடு முழுவதும் இப்போது உள்ள எதிர்பார்ப்பாகும். இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வோ, காங்கிரஸ் கட்சியோ தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே, மாநில கட்சிகள் வலுபெற்று கொண்டிருக்கிறது. அதனால் தான் பா.ஜ.க.வும் சரி, காங்கிரசும் சரி, மாநில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க கடும் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றன. மராட்டியத்தில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் கடந்த சில ஆண்டுகளாகவே எதிரும் புதிருமாக இருந்தன. ஆனால் இப்போது மொத்தம் உள்ள 48 இடங்களில் 25 இடங்களில் பா.ஜ.க.வும், 23 இடங்களில் சிவசேனாவும் போட்டியிடுவது என்று உறுதியாகிவிட்டது. இதுபோல, தமிழ்நாட்டிலும் நடந்த முயற்சிகளில் ஒரு முடிவு வந்துவிட்டது. 

தேசிய அளவில் பா.ஜ.க.வும், காங்கிரசும் வலுவுள்ள கட்சிகள் என்றாலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் இரு கட்சிகளுக்குமே அவர்கள் தலைமையில் கூட்டணி வைக்கும் அளவுக்கு பலம் இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். 1967–ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால், 1967–ம் ஆண்டு தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றதில் இருந்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தமிழ்நாட்டில் மாறி.. மாறி.. ஆட்சி நடத்துகின்றன. இந்த கட்சிகளின் பலம் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கிறது. அதனால் தான், தொடர்ந்து நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரசும், பா.ஜ.க.வும் தி.மு.க., அ.தி.மு.க.வோடு சேர்ந்து, அவர்கள் தலைமையை ஏற்று கூட்டணியில் போட்டியிட்டு வருகின்றன. 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைத்து போட்டியிட்ட பிறகு, இப்போது இந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் மலர்ந்திருக்கிறது. 

இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகளும், மராட்டியத்தில் 48 இடங்களும், மேற்கு வங்காள மாநிலத்தில் 42 இடங்களும், புதுச்சேரியை சேர்த்து தமிழ்நாட்டில் 40 தொகுதிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் வெற்றி பெறும் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆதரவு தெரிவிப்பவர்தான் பிரதமர் என்றநிலை இருக்கிறது. இந்தநிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 இடங்களும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் எப்போதுமே முழுமையாக ஒரு பக்கம் மெஜாரிட்டியை கொடுப்பார்கள். அந்தவகையில், இந்தமுறை அடுத்த பிரதமர் யார்? என்று தமிழக மக்கள் யாரை காட்டப்போகிறார்கள் என்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றாகும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 இடங்களை கொடுத்து நடைபெறப்போகும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை பா.ம.க. ஆதரிக்கும் என்ற உறுதியையும் பெற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் சாதுர்யத்தை காட்டிவிட்டார். ஏனெனில் வட மாவட்டங்களில் உள்ள 7, 8 சட்டமன்ற தொகுதிகளில் பா.ம.க.வின் ஆதரவு நிச்சயம் தேவை. 

Next Story