தேர்தல் பணியில் ஆசிரியர்களா?


தேர்தல் பணியில் ஆசிரியர்களா?
x
தினத்தந்தி 24 Feb 2019 10:30 PM GMT (Updated: 24 Feb 2019 11:15 AM GMT)

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தமிழ்நாட்டில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் மிகத் தீவிரமாக தேர்தல் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தமிழ்நாட்டில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் மிகத் தீவிரமாக தேர்தல் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் எந்தநேரத்திலும் வெளியிடப்படலாம். பொதுவாக தேர்தலுக்கு முன்பு தலைமைத் தேர்தல் அதிகாரி அரசியல் கட்சிகளோடு கலந்து ஆலோசனை செய்வார். அந்தவகையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன்சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 9 கட்சிகள் கலந்துகொண்டன. அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மிக ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவித்தனர். இதில், அ.தி.மு.க., தே.மு.தி.க. சார்பில் கலந்துகொண்டவர்கள் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல கருத்தை முன்வைத்தனர். 

அ.தி.மு.க. சார்பில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ‘‘ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. மாணவர்களின் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே, அவர்களுக்கு பதிலாக உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், அங்கன்வாடி – சத்துணவு ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரி போன்றவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால் நல்லது. இவர்கள் எல்லாம் அந்த ஊரிலேயே பணியாற்றி, அங்கேயே தங்கியிருப்பவர்கள். இப்போதெல்லாம் ஆசிரியர்கள் வெளியூரில் இருந்துதான் பணிக்கு வருகிறார்கள். பணியை முடித்துவிட்டு மாலையிலேயே திரும்பிவிடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு உள்ளூரில் உள்ளவர்களை முழுமையாக தெரியாத நிலையில், உள்ளூரில் உள்ள ஒவ்வொருவரையும் தெரிந்து வைத்திருக்கும் மற்ற ஊழியர்களை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். மக்களோடு அன்றாடம் தொடர்புள்ளவர்களை மட்டும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்’’ என்றார். 

தே.மு.தி.க. சார்பில் பேசிய இளங்கோவன், ‘‘வாக்காளர் சேர்ப்பு பணியிலேயே ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது’’ என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக இது நல்ல கருத்து. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 99 ஆயிரத்து 303 ஆகும். தேர்தல் பணிகளில் இவர்கள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் தான் மாணவர்கள் இறுதித் தேர்வை எழுதியிருப்பார்கள். ஆசிரியர்களுக்கு அவர்களது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இருக்கும். அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கின்றநிலையில், அதற்கேற்ப பாடத்திட்டங்களை தயாரிப்பது, இலவச பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைத்திருப்பது, அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கான முயற்சியில் ஈடுபடுவது, பள்ளிக்கூடங்களின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடுவது என்பது போன்ற பல பணிகளில் ஈடுபட வேண்டியநிலையில், தேர்தல் பணிக்காக ஆசிரியர்களை ஈடுபடுத்தினால் அவர்கள் கவனம் எல்லாம் தேர்தல் பணியில் தான் இருக்குமே தவிர மாணவர் நலனில் இருக்க வாய்ப்பு குறைவு. எனவே, தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் ஆசிரியர்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியுமா? என்பதை பரிசீலிக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. 

Next Story