விமானப்படைக்கு வீரவணக்கம்


விமானப்படைக்கு வீரவணக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-26T18:24:39+05:30)

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பயங்கரவாதிகளுக்கு தங்கள் நாட்டுக்குள் பயிற்சியளிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் பாகிஸ்தான் செய்துவருகிறது.

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பயங்கரவாதிகளுக்கு தங்கள் நாட்டுக்குள் பயிற்சியளிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் பாகிஸ்தான் செய்துவருகிறது. பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, காஷ்மீரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 14–ந்தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்றுகொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ்படை வீரர்கள் வாகனம்மீது வெடிகுண்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை தற்கொலைப்படை பயங்கரவாதி மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

இந்த சம்பவத்திற்கு, நாங்கள்தான் காரணம் என்று பாகிஸ்தானில் செயல்பட்டுவரும், பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவுபெற்ற ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு கொக்கரித்தது. இந்திய போலீஸ்படையினர் ஒவ்வொருவரும் சிந்திய ரத்தத்திற்கு பாகிஸ்தானும், அதன் தயவால் இயங்கிக்கொண்டிருக்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கமும் பதில்சொல்லியே ஆகவேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் வீரஆவேசமாக முழக்கமிட்டது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலைத்தொடர்ந்து மேலும் பல தற்கொலைப்படைகளை இந்தியாவுக்கு அனுப்பி பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுப்பிரிவுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்தது. ஏறத்தாழ 20 ஆண்டுகளாக பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு, மசூத் அசார் என்பவரின் தலைமையின் கீழ் இயங்கிவரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், முகாம்கள் நடத்திக்கொண்டிருப்பதையும் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதையும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இந்தியா தெரிவித்தாலும் பாகிஸ்தான் அதை பொருட்படுத்தவில்லை.

இந்தநிலையில், இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது, எங்கள் ராணுவத்தினர், போலீஸ்படையினரின் உயிர்களை இனிமேலும் இழக்கத்தயாராக இல்லை என்ற நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ்–2000 ரக ஜெட்விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவின. அங்கு பாலகோட், சகோதி, முசாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் 30 நிமிடநேரம் பயங்கரவாதிகள் நடத்திய முகாம்களை மட்டும் குறிவைத்து லேசர் வழிகாட்டுதலுடன் துல்லிய தாக்குதல்கள் நடத்தி குண்டுமாரி பொழிந்தது. இதில் நமது விமானப்படையை நிச்சயமாக பாராட்டவேண்டும். பொதுமக்களுக்கு எந்தபாதிப்பும் இல்லாமல் தீவிரவாதிகளின் முகாம்களை மட்டும் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டியது. இதில் மசூத் அசாரின் மைத்துனர்தான் அந்த முகாம்களுக்கு தலைமை தாங்கி நடத்திவந்தார். அவரும் இந்த தாக்குதலில் உயிர் இழந்திருக்கிறார். பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தியா நிச்சயமாக இந்ததாக்குதலை நடத்தியிருக்காது. ஆனால், எத்தனைமுறை சொல்லியும் பாகிஸ்தான் கேட்காத நிலையில், இந்தத்தாக்குதலை நடத்தவேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. பயங்கரவாதிகள்மீது மட்டும் தாக்குதல் நடத்திவிட்டு நமது போர்விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பின. இந்தத்தாக்குதலை இவ்வளவு திறமையாக நடத்திய விமானப்படைக்கு இந்திய மக்கள் வீரவணக்கம் செலுத்துகிறார்கள். கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, ‘‘ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்.’’ இந்தநேரத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் நமக்குள் உள்ள வேறுபாடுகள், வித்தியாசங்கள், பிரிவினைகள், எல்லாவற்றையும் தூக்கி ஓரம்கட்டிவிட்டு, ஓரணியில் ஒன்றாக நிற்கவேண்டியது அவசியம். இது ராணுவ நடவடிக்கை அல்ல, போர் நடவடிக்கை அல்ல, பயங்கரவாதிகளை மட்டும் தாக்கும் நடவடிக்கை என்பதை உலக நாடுகளுக்கு புரியவைக்கவேண்டும்.

Next Story