அபிநந்தனை இந்தியா வரவேற்கிறது


அபிநந்தனை இந்தியா வரவேற்கிறது
x
தினத்தந்தி 28 Feb 2019 10:30 PM GMT (Updated: 28 Feb 2019 1:02 PM GMT)

புலவாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் பயங்கரவாத இயக்க முகாம்களை மட்டும் குறிவைத்து இந்திய விமானப்படை தாக்குதலை நடத்திவிட்டு வந்தது.

புலவாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் பயங்கரவாத இயக்க முகாம்களை மட்டும் குறிவைத்து இந்திய விமானப்படை தாக்குதலை நடத்திவிட்டு வந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் எல்லைதாண்டி வந்தநேரத்தில் காஷ்மீர் பகுதியில் 4 இடங்களில் குண்டுவீசிவிட்டு சென்றது. பாகிஸ்தானின் எப்16 ரக விமானத்தை நாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டோம். அது பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துவிட்டது என்று இந்தியா சொன்னாலும், பாகிஸ்தான் ராணுவம் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. 

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஜெட் ரக விமானங்களை விமானம் மூலம் விரட்டி அடிக்க தமிழ்நாட்டை சேர்ந்த விமானி கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் சென்ற மிக்–21 ரக விமானம் பாகிஸ்தானிய விமானத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியில் குதித்த அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கியநேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் சில வீடியோக்களை வெளியிட்டது. அதில் கீழே விழுந்து கிடந்த அபிநந்தன் சரமாரியாக தாக்கப்படுவது போலவும், அவரது கண்ணையும், கைகளையும் பின்புறமாக கட்டி அழைத்துச்செல்வது போலவும், அதேநிலையில் முகத்தில் ரத்த காயத்துடன் விசாரணை நடப்பதுபோலவும் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பிறகு சற்றுநேரத்தில் மற்றொரு விசாரணை வீடியோ வெளியானது. அதில் டீ குடித்துக்கொண்டே பேசும் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் எல்லாம் தன்னை ரொம்ப நன்றாக நடத்துவதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை தன்னை வெகுவாக கவர்ந்து இருப்பதாகவும், இந்திய ராணுவமும் இதேபோல நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் சொல்லும் காட்சிதான், ஏதோ அச்சுறுத்தி திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் போன்றே தெரிகிறது. இதை உறுதிப்படுத்துவதுபோலவே அபிநந்தன் தன் கண்களை இருபுறமும் சுழலவிட்டு கொண்டே இருக்கும்நிலை காணப்படுகிறது. ஆக, மிரட்டப்பட்டு அவர் அந்த வாக்குமூலம் கொடுத்தாரா? என்ற ஐயமும் இருக்கிறது. பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறும்வகையில் இருக்கிறது. 

ஜெனீவா ஒப்பந்தத்தில் இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் கையெழுத்திட்டு இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி போர் கைதிகள் இதுபோல நடத்தப்படக்கூடாது. அவர்களை அவமானப்படுத்தும் வகையில் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அவர்களை கண்ணியத்தோடு நடத்தவேண்டும். அவர்கள் தாக்கப்படக்கூடாது. அவர்கள் தூண்டப்படக்கூடாது. அவமானப்படுத்தப்படக்கூடாது என்று தெளிவாக இருக்கிறது. ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி அபிநந்தன் நடத்தப்பட்டதாக கருத்து வெளியிட்ட இந்தியா, தொடர்ந்து அவரை பாகிஸ்தான் விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அங்குள்ள வெளிவிவகார அமைச்சகத்திடம் வலியுறுத்தினார். இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் பேசும்போது, ‘இந்திய பிரதமர் மோடியுடன் பேச முயற்சி செய்தேன். அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என்று அறிவித்தார். பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம்’ என்றும் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது. அபிநந்தனின் தாத்தாவும் விமானப்படை அதிகாரி. தந்தையும் விமானப்படை அதிகாரி. அவரது மனைவியும் ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்து ஓய்வுபெற்றவர். நாட்டின் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் குடும்பத்தின் தலைமகன் அபிநந்தனை வருகவே! வருகவே!! என்று மகிழ்ச்சியோடு இந்திய மக்கள் அனைவரும் இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள்.

Next Story