அத்திக்கடவில் அத்தி பூத்தது


அத்திக்கடவில் அத்தி பூத்தது
x
தினத்தந்தி 1 March 2019 10:30 PM GMT (Updated: 1 March 2019 1:06 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் கூறும் வழக்குமொழிகள் எல்லாம் அர்த்தம் உள்ளதாகவே இருக்கும். அபூர்வமாக நடக்கும் நிகழ்வுகளை எல்லாம், ‘அத்தி பூத்தாற்போல’ என்பார்கள்.

மிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் கூறும் வழக்குமொழிகள் எல்லாம் அர்த்தம் உள்ளதாகவே இருக்கும். அபூர்வமாக நடக்கும் நிகழ்வுகளை எல்லாம், ‘அத்தி பூத்தாற்போல’ என்பார்கள். ஏனெனில், அத்திமரம் பூ பூப்பது என்பது அபூர்வமானது. அதுபோல, கடந்த 60 ஆண்டுகளாக கொங்கு மண்டல மக்கள் கனவு கண்டு கொண்டிருந்த அத்திக்கடவு– அவினாசி திட்டம் நனவாக போகிறது என்ற நிலையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இந்தத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்தத்திட்டத்தினால், ‘கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைய போகிறார்கள். எங்கள் தாத்தா கனவு கண்டார். எங்கள் காலத்தில் நிறைவேறப்போகிறது’ என்று பேரன்மார்களாகிய இந்தப்பகுதி விவசாயிகள் எல்லாம் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்படி முல்லை பெரியாறு அணைக்கு பிதாமகன் பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய ராணுவ பொறியாளரோ, அதுபோல இந்தத்திட்டத்தின் பிதாமகன் ஆர்தர் காட்டன் என்று கூறப்படும் ஆங்கில பொறியாளர்தான். 

1862–ம்ஆண்டு ஆர்தர் காட்டன் பவானி ஆற்றில் இருந்து எந்தபயனும் இல்லாமல் வீணாய் போய்க் கொண்டிருக்கும் தண்ணீரை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டார். அவர் விதைத்த வித்தின் வளர்ச்சிதான், இப்போதைய அத்திக்கடவு–அவினாசி திட்டமாகும். 1957–ல் சட்டசபை உறுப்பினராக இருந்த மாரப்ப கவுண்டர் இந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அன்றிலிருந்து இந்தத்திட்டம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 1991–96–ம் ஆண்டு, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இந்தத்திட்டத்தை ரூ.134 கோடி செலவில் நிறைவேற்ற முதலாவது திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டது. அன்று தொடங்கி தொடர்ந்து எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் மாநிலஅரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டே நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

ரூ.1,652 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட இந்தத்திட்டத்துக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

காளிங்கராயன் அணைக்கட்டில் கீழ்புறத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரிநீரை நீரேற்று பாசனமுறையின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும்வகையில், அத்திக்கடவு–அவினாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் கீழ்புறத்தில் இருந்து 230 மீட்டர் தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைத்து, அதிலிருந்து இந்த 3 மாவட்டங்களிலுள்ள 9 தாலுகாக் களில் உள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 பஞ்சாயத்து யூனியன் குளங்கள், 971 கசிவுநீர் குட்டைகளை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்திற்கான டெண்டரைபெறும் நிறுவனம் 10 மாதங்களுக்குள் விரிவான திட்டஅறிக்கையை தாக்கல் செய்து அரசின் ஒப்புதலை பெற்றவுடன், 2 ஆண்டுகளில் கண்டிப்பாக இந்தத்திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆக, இன்னும் 3 ஆண்டுகளில் அத்திக்கடவு–அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதும், வரவேற்புக்குரியதும் ஆகும். இந்த விழாவில் கோதாவரி–காவிரி மற்றும் ஆனைமலையாறு–நல்லாறு இணைப்பை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இந்தத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோதாவரியில் இருந்து 200 டி.எம்.சி. தண்ணீர் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்கும். இதுபோல, தமிழ்நாட்டில் நீர்வளத்தை பெருக்க பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் தொடக்கத்தை காணாமல், தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல திட்டங்களை நிறைவேற்ற தமிழகஅரசு முனைப்புடன் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

Next Story