ஏப்ரலில் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்குமா?


ஏப்ரலில் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்குமா?
x
தினத்தந்தி 3 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-03T17:21:19+05:30)

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்வு, போட்ட முதலாவது கிடைக்குமா? என்ற ஒரு பரிதாபகரமான நிலைமையில் போய்க்கொண்டிருக்கிறது.

மிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்வு, போட்ட முதலாவது கிடைக்குமா? என்ற ஒரு பரிதாபகரமான நிலைமையில் போய்க்கொண்டிருக்கிறது. பருவமழை பொய்த்தல், புயல்–வெள்ளம், வறட்சி, பூச்சி தாக்குதல் என்பது போன்ற பல இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகளின் பயிர்கள் எல்லாம் நாசமாகிறது. பயிர்க்காப்பீடு என்று இன்சூரன்ஸ் திட்டம் இருந்தாலும் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இந்த திட்டம் பற்றி தெரியவில்லை. கட்டவேண்டிய குறைந்தபட்ச பிரிமியம் தொகையைக்கூட இதை கட்டவேண்டுமா? என்ற உணர்வு இருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 1–ந் தேதி இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசாங்கம் தாக்கல் செய்தது. அதில் நாட்டில் உள்ள 12 கோடி ஏழை–எளிய சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு 3 தவணைகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் 1–ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துவிடும். ஆக, உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 24–ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். 

தமிழ்நாட்டில் இருந்து ஏறத்தாழ 70 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் அடைகிறார்கள். சிறு, குறு அனைத்து விவசாயிகளுக்கும் 31–ந் தேதிக்குள் இந்த திட்டத்தின் பலன் கிடைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அதிகாரிகள் வேகமாக செயல்படுகிறார்கள். இதேபோல் தமிழக அரசும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு இணங்க இன்று இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திலும், கணிசமான எண்ணிக்கையில் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதுமட்டுமல்லாமல் பிரதமர் அறிவித்த திட்டத்தின்கீழ் அடுத்த தவணைக்கான தேதி ஏப்ரல் 1–ந் தேதி தொடங்கிவிடுகிறது. தற்போது விவசாயிகள் அடுத்த தவணையை பெறுவதற்கு ஆதார் பதிவு கட்டாயம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. 

17–வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியிடப்பட்டுவிடும் என்றநிலையில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அந்தநிலையில் ஏப்ரல் 1–ந் தேதிக்கு மேல் தேர்தல் முடியும் வரை 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதை தேர்தல் கமி‌ஷன் நிச்சயமாக அனுமதிக்காது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அரசு தரப்பிலோ, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடியாதே தவிர, பழைய திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு எந்தவித தடையும் இல்லை. இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே ஒரு தவணை கொடுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாகத்தான் 2–வது தவணையாக ஏப்ரல் 1–ந் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சிறு, குறு விவசாயிகளோ, இந்த 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பது எங்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது. இதற்கு தேர்தல் கமி‌ஷன் தடையாக இருக்கக்கூடாது என்ற உணர்வில்தான் இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில், இப்போது எல்லோருடைய பார்வையும் தேர்தல் கமி‌ஷன் மீதுதான் இருக்கிறது.

Next Story