100 நாட்கள் மட்டுமல்ல; ஆண்டு முழுவதும் வேண்டும்


100 நாட்கள் மட்டுமல்ல; ஆண்டு முழுவதும் வேண்டும்
x
தினத்தந்தி 6 March 2019 10:00 PM GMT (Updated: 6 March 2019 3:12 PM GMT)

ஒரு நாடு அல்லது மாநிலம் பொருளாதார ரீதியான வளர்ச்சி உள்பட ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி அடையவேண்டும் என்றால், அங்கு நிச்சயமாக தொழில்வளர்ச்சி பெருகவேண்டும்.

தொழில்வளர்ச்சி பெருகினால்தான் வேலைவாய்ப்பு பெருகும். மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதனடிப்படையில் வணிகமும் பெருகும். சிறுகுறு, நடுத்தர தொழில்கள்தான் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிய அளவில் வேலைவாய்ப்பை பெருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு சேவைவரியாலும் ஏராளமான சிறுகுறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டன. இந்த தொழிற்சாலைகள் எல்லாம் புனரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்படவேண்டும் என்றாலும், புதிய தொழிற்சாலைகள் உருவாகவேண்டும் என்றாலும், அரசாங்கங்களின் அனுமதி வேகமாக கிடைக்கவேண்டும். உள்கட்டமைப்பு வசதி சிறந்தமுறையில் உருவாக்கப்படவேண்டும். தொழிலாளர் அமைதி நிலவவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கடன்வசதி அளிக்கப்படவேண்டும். 

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுகுறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்காக, தீபாவளி பரிசாக 12 அம்சத்திட்டங்களை வெளியிட்டார். இந்தத்திட்டங்கள் எல்லாம் 100 நாட்களில், 100 மாவட்டங்களில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். இதில் மிகமுக்கியமான திட்டம் எதுவென்றால், இந்த தொழிற்சாலைகள் எல்லாம் 1 கோடி ரூபாய்வரை கடனுக்காக விண்ணப்பித்தால் 59 நிமிடங்களில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்பதுதான். இதுமட்டுமல்லாமல், 2 சதவீதம் வட்டியும் குறைக்கப்படும். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தங்களுக்கு தேவையான பொருட்களில் 25 சதவீத பொருட்களை இதுபோன்ற சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களில் இருந்துதான் பெறவேண்டும் என்பதாகும். பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடும்போது, நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு சென்றுசேரும் நேரத்தில், உங்களுக்கு கடன் கிடைத்துவிடும் என்று அறிவித்தார். பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒருசில நிமிடங்களிலே புதிய தொழில்முனைவோர்கள் ஏராளமானவர்கள் விண்ணப்பிக்க தொடங்கிவிட்டனர். 72 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாறு கடன் வசதி அளிக்க பிரதமர் இலக்கை நிர்ணயித்திருந்தார். 

ஆனால், இப்போது 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்தத்திட்டம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு லட்சத்து 62 ஆயிரம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 12 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3,565 கோடியே 46 லட்சம் கடன்வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 35 ஆயிரத்து 517 தொழில்நிறுவனங்களுக்கு புதிய கடன்களாக ரூ.10 ஆயிரத்து 47 கோடியும், 77 ஆயிரத்து 369 நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 609 கோடியும் புதுப்பிக்கப்பட்ட கடனாகவும் வழங்கப்படுகிறது. நிச்சயமாக பிரதமரின் இந்த அறிவிப்பு, தொழில் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும். இந்தியா முழுவதும் ரூ.6 கோடியே 33 லட்சத்து 88 ஆயிரம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் 11 கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 5 லட்சத்து 26 ஆயிரத்து 947 நிறுவனங்கள் உத்யோக் ஆதார் பதிவறிக்கை பெற்றுள்ளன. இன்னும் ஏராளமான தொழில்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட வேண்டும். பிரதமரின் இந்த 100 நாட்கள் திட்டம் 100 மாவட்டங்களோடு முடிவடைந்துவிடக்கூடாது. 59 நிமிடங்களில் கடன்வசதி வழங்கும் திட்டம் ஒரு தொடர் திட்டமாக இந்தியா முழுவதும் நிறைவேற்றப்படவேண்டும். இனி இந்தியாவில் எப்போது சிறுகுறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கும் நிலையில் கடனுக்காக விண்ணப்பித்தாலும், 59 நிமிடங்களில் கடன் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்படவேண்டும்.

Next Story