என்ன கொடுமை இது!


என்ன கொடுமை இது!
x
தினத்தந்தி 10 March 2019 10:30 PM GMT (Updated: 10 March 2019 5:51 PM GMT)

நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் வெளிநோயாளிகள், 70 ஆயிரத்திற்கும் மேல் உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள 48 மருத்துவமனைகள், 303 மாவட்ட மற்றும் தாலுகாக்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி உள்பட நகர்ப்புற 406 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் என்று அரசு மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் வெளிநோயாளிகள், 70 ஆயிரத்திற்கும் மேல் உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில், எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை நோயாளிகளுக்கு ஏற்றிய சம்பவங்கள் சமீப காலமாக நடந்துள்ளன. 

கடந்த டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச்சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கர்ப்பிணியான அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. கிருமி கலந்தது கண்டு பிடிக்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ‘‘இப்படி எச்.ஐ.வி. நோய் கிருமியுள்ள ரத்தத்தை எனக்கு செலுத்தி என்னை எச்.ஐ.வி. நோயாளியாக ஆக்கியதற்கு பதிலாக வி‌ஷ ஊசிபோட்டு கொன்றிருக்கலாமே’’ என்று அந்தப்பெண் கதறியது தமிழ்நாட்டையே உலுக்கியது. இப்போது அந்தப்பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு பாவமும் அறியாத அந்தக்குழந்தைக்கு எச்.ஐ.வி. நோய் தாக்கியிருக்கலாமோ என்பது 45 நாட்களுக்கு பிறகு ரத்த பரிசோதனை செய்தபிறகுதான் சொல்லமுடியும். அந்த வகையில் 46–வது நாளான கடந்த 4–ந்தேதி பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குழந்தைக்கு 6 மாதங்கள், 1½ வயதிலும் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டுமாம். இதேபோல, மற்றொரு குழந்தைக்கும் எச்.ஐ.வி. கிருமி உள்ள ரத்தத்தை செலுத்திய கொடுமை கோவையில் நடந்துள்ளது. கடந்த 2017–ம் ஆண்டு மார்ச் 6–ந்தேதி பிறந்த ஒரு பெண் குழந்தை கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. 2018–ம் ஆண்டு ஜூலை 12–ந்தேதி அந்தக் குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. பாதி ரத்தம் செலுத்தப்பட்டு கொண்டிருந்தபோதே இது ஒரு வயதான முதியவரின் ரத்தம் தவறுதலாக கொடுத்து விட்டோம் என்று இடையிலேயே ரத்தம் செலுத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்று அந்தக்குழந்தையின் தகப்பனார் கூறுகிறார். அடுத்த சிலநாட்களில் அந்தக்குழந்தையின் உடம்பில் கட்டிகள் போன்று தோன்றியது. 

கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ரத்தப்பரிசோதனை செய்தபோது அந்தக்குழந்தை எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. டாக்டர்கள், ‘‘நாங்கள் செலுத்திய ரத்தத்தில் எச்.ஐ.வி. நோய் கிருமி இல்லை. வேறு பல இடங்களுக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார்கள்’’ என்று காரணங்களை கூறினாலும், இந்தப்பாதிப்புக்கு யார்காரணம்? என்பதை அரசு கண்டுபிடிக்கவேண்டும். தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்ட ரத்தத்திலே எச்.ஐ.வி. நோய் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக, அரசு மருத்துவமனைகளின் ரத்தவங்கிகளிலும் நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்தும் முன்பு அந்த ரத்தத்தை பரிசோதனை செய்ததிலும் நிச்சயமாக பெரிய குறைபாடு இருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை உடனடியாக இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்ட கவனக்குறைவால் வாழ்க்கையில் ஒளியை இழந்து இருண்ட வாழ்க்கையில் வாழவேண்டிய நிலையிலுள்ள சாத்தூர் பெண்ணுக்கும், இந்த குழந்தைக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவும் அவர்களுக்கு வீட்டுவசதி உள்பட அனைத்து வாழ்வாதார வசதிகளையும் செய்து கொடுப்பதும் தமிழக அரசின் கடமையாகும்.

Next Story