மத்தியிலும், மாநிலத்திலும் ஆளப்போவது யார்?


மத்தியிலும், மாநிலத்திலும் ஆளப்போவது யார்?
x

17-வது நாடாளுமன்றத்திற்காக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் 7 கட்டங்களில் தேர்தல் நடத்தும் அறிவிப்பை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது.

2014-ம் ஆண்டு நடந்ததேர்தலில் 81 கோடியே 45 லட்சம் பேர் தகுதியுடைய வாக்காளர்களாக இருந்தார்கள். ஆனால், இப்போது தேர்தலில் ஏறத்தாழ 90 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில், 8 கோடியே 40 லட்சத்திற்கும்மேல் புதிதாக இப்போது வாக்காளர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் 1 கோடியே 50 லட்சம் பேர் 18 வயதிலிருந்து 19 வயதுடையவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில், இந்த 8 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள்? என்பதும் வெற்றி-தோல்வியை ஓரளவிற்கு நிர்ணயிக்கும்.

இந்தத்தேர்தல், நிச்சயமாக பரபரப்பான தேர்தலாக இருக்கப்போகிறது. கடந்த 5 ஆண்டுகளாக அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சிசெய்து வந்த மோடி, தொடர்ந்து ஆட்சி செய்வாரா?, அதேபோல தனிப்பெரும்பான்மை கிடைக்குமா? அல்லது கடந்த முறை 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற காங்கிரஸ் மாநிலங்களிலுள்ள கட்சிகள் மற்றும் தேசியளவில் உள்ள சிலகட்சிகளை சேர்த்து கூட்டணி ஆட்சி வைக்க வேண்டும் என்றவகையில், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி வெற்றிபெறுமா? என்பதுதான் மக்களுடைய பார்வையாக இருக்கிறது. இருதரப்புமே விவசாயிகளை குறிவைக்கிறது. அமைதிக்கு பெயர் போன தமிழ்நாட்டில் எப்போதுமே ஒரேநாளில் தேர்தல் நடக்கும் என்றவகையில், இந்தமுறையும் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா வருவதால் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழக வாக்காளர்களை பொறுத்தமட்டில், ஒருபக்கம் மத்தியில் யார் ஆட்சி செய்யவேண்டும் என்ற தங்கள் முடிவை 39 நாடாளுமன்ற தொகுதி தேர்தலிலும், புதுச்சேரி மக்கள் ஒரு தொகுதி தேர்தலிலும் வாக்களிக்கப்போகிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவேண்டும் என்றநிலையில், 3 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆக, மீதமுள்ள 18 தொகுதிகளில் நடக்கும் தேர்தல் தற்போது அரசை நடத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டிக்கு தேவையான ஒரு சில இடங்கள் கிடைத்தால்தான் ஆட்சி நீடிக்கும் என்று பேசப்படுகிறது. எல்லாவற்றுக்கும் விடை மே-23-ந்தேதி தெரிந்துவிடும் என்றநிலையில், அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் பிரசாரங்களிலும், தேர்தல் பணிகளிலும் எதிரிகளாக பாவிக்காமல், எதிர்க்கட்சிகளாக மட்டுமே பாவித்து பணியாற்ற வேண்டும். தேர்தல் கலவரம் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் நேரம் என்பதால், தேர்தல் பிரசாரத்துக்காக அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை வைத்து அவர்கள் படிப்புக்கு இடையூறு செய்யக்கூடாது. ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் 17-ந்தேதி மகாவீரர் ஜெயந்தி விடுமுறை, அடுத்தநாள் பெரிய வெள்ளிக்கிழமை விடுமுறை, அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை. ஆக 5 நாட்கள் விடுமுறை தேர்தல் வாக்குப்பதிவை பாதித்துவிடக்கூடாது. 5 நாட்கள் தொடர்விடுமுறை என்று வெளியூர்களுக்கு போய்விடக்கூடாது. ஓட்டுப்போடுவது ஜனநாயக கடமை என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 66.38 சதவீதம்பேர் வாக்களித்து, இந்தியாவில் ஒரு புதிய சரித்திரத்தை படைத்தனர். இந்ததேர்தலில் அதைவிட அதிகமான பேர் ஓட்டுப்போடவேண்டும். இந்தியாவிலேயே அதிக வாக்குப்பதிவு நடந்த இடம் தமிழ்நாடுதான் என்ற பெயரை பெறவேண்டும் என்பதுதான் தமிழகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

Next Story