மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லையா?


மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லையா?
x
தினத்தந்தி 12 March 2019 10:00 PM GMT (Updated: 12 March 2019 7:37 PM GMT)

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தமிழக சட்டசபையில் தற்போது 21 தொகுதிகள் காலியாக உள்ளன. டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சிதாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி இழந்ததால், அந்த 18 தொகுதிகளும் காலியாக இருக்கின்றன. இதுதவிர, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவையொட்டி திருப்பரங்குன்றம் தொகுதியும், அ.தி.மு.க. முன்னாள் மந்திரி பி.பாலகிருஷ்ணரெட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கலவர வழக்கில் 3 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற வழக்கில் அவர் பதவி இழந்ததால் ஓசூர் தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்போது இடைத்தேர்தல் 21 தொகுதிகளுக்கும் அறிவிக்கப்படாமல், 18 தொகுதிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் ஐகோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று எந்த கோர்ட்டும் இடைக்கால தடை விதிக்கவில்லை. ஒட்டப்பிடாரம் தொகுதியை எடுத்துக்கொண்டால், 2016-ம் ஆண்டு 493 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, 1,750 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் ஏ.பி.கீதா, வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து அதுவும் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் இப்போது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி இழந்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தமட்டில், வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் இப்போது உயிரோடு இல்லை. அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் இப்போது வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் வழக்குகளை பொறுத்தமட்டில், உடனடியாக தீர்ப்பு வந்துவிடப்போவதில்லை. 2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் அப்போது மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு இன்னமும் சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், 2016-ம் ஆண்டு தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. இதுபோல, 2006-ம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரையின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் தொடர்ந்த வழக்கு சமீபத்தில்தான் முடிவுக்கு வந்துள்ளது. அந்த தொகுதியிலும் வழக்கை காரணம் காட்டி 2011, 2016-ம் ஆண்டு தேர்தல்கள் ஒத்திவைக்கப்படவில்லை. இப்போது ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் பி.பாலகிருஷ்ணரெட்டி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்செய்துள்ள நிலையில், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்படாமல் நடத்தப்படுகிறது. எனவே, தேர்தல் கமிஷன் இதுபோல வழக்குகளை காரணம்காட்டி, இந்தமுறை மட்டும் 3 தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்திருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும். தி.மு.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதைதான் வலியுறுத்துகின்றன. உடனடியாக முறைப்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், இதுகுறித்த முறையான முறையீடுகள் அனைத்து தரப்பினராலும் தாக்கல் செய்யப்படவேண்டும். திருப்பரங்குன்றம் போல, மற்ற தொகுதிகளுக்கான வழக்குகளும் வாபஸ் பெறப்படவேண்டும்.

Next Story