விசுவரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்


விசுவரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்
x
தினத்தந்தி 13 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-13T19:55:11+05:30)

தமிழ்நாடு முழுவதும் இப்போது பொள்ளாச்சியில் ஒரு கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடிய பாலியல் கொடுமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.

பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த 19 வயது மாணவி ஒருவர் பேஸ்புக்கில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த் என்ற சிவில் என்ஜினீயருடன் நட்பு கொண்டு இருக்கிறார். ஒருநாள் கல்லூரி மதிய இடைவேளையின்போது அந்த மாணவிக்கு, சபரிராஜன் போன் செய்து அருகில் உள்ள ஊஞ்சலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தன் பேஸ்புக் நண்பர்தானே அழைக்கிறார் என்று நம்பி, அந்த பெண் ஊஞ்சலாம்பட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கு காரில் தன் நண்பர்கள் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோருடன் நின்று கொண்டிருந்த சபரிராஜன், அந்த பெண்ணை காருக்குள் இழுத்துப்போட்டு சென்றார். சமூகவலைதளங்களில் வெளிவந்த காட்சிகளைப் பார்த்தால், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்று பாரதியார் பாடிய பாடலை கோபத்தின் உச்சிக்குச்சென்று கதற வைக்கிறது. ‘டேய் உன்னை நம்பித்தானே வந்தேன் என்று கூறுவதில் இருந்து .... ஒரு பெண் கதறி அழுதுகொண்டு கூறும் வார்த்தைகளெல்லாம் இதயத்தை கசக்கிப்பிழிகிறது.

இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த 4 பேரிடமும் உள்ள செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து பார்த்தபோது, அதில் ஏராளமான பெண்களிடம் இதுபோல மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ள காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50–க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களை பேஸ்புக் மூலம் தங்கள் காதல் வலையில் விழவைத்து அச்சுறுத்தி பணமும் பறித்து, கற்பையும் சூறையாடியதாக தெரிகிறது. கல்லூரி மாணவி சம்பவத்தில் 4 பேர் கைதுக்குப்பிறகு, மேலும் 5 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை புகாரை வாபஸ் வாங்கு என்று மிரட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளில் அந்த பகுதியில் இளம் பெண்கள் தற்கொலை செய்த விவகாரங்களை எல்லாம் மீண்டும் மறுவிசாரணைக்கு எடுத்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. குற்றவாளிகள் 4 பேர் மீதும் இப்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. முதலில் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்பு நேற்று முன்தினம் பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. ஒருசில மணி நேரங்களில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இது நல்ல முடிவு. சி.பி.ஐ. உடனடியாக இந்த வழக்கை எடுத்து தன் எல்லையை விரிவாக்கி ஆழமாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அதையும் விசாரிக்க வேண்டும். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் மட்டும் நடந்துள்ளதா?, தமிழ்நாட்டில் வேறு எங்கேயாவதும் இதுபோல நடந்துள்ளதா? என்று விசாரிக்க வேண்டும். மற்ற சில வழக்குகளைப்போல இல்லாமல், இந்த வேதனையான செயலைத் தொடர்ந்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல், கூடுதல் அதிகாரிகளை சி.பி.ஐ. நியமித்து விரைவில் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக புலன் விசாரணை செய்து கொடூர குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரவேண்டும். 

Next Story