குரூப்–1 தேர்வுத்தாளிலேயே தவறுகளா?


குரூப்–1 தேர்வுத்தாளிலேயே தவறுகளா?
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-14T20:09:34+05:30)

தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, சரக்கு சேவைவரி போன்ற பல்வேறு காரணங்களினால் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் இப்போது வெகுவாக குறைந்துள்ளது.

அரசு வேலை வாய்ப்புகள் எப்போது வரும் என்று இளைஞர்கள் மிக ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். தமிழக அரசை பொறுத்தமட்டில், அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், போலீஸ், தீயணைக்கும்படை போன்ற தேர்வுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமமும் நடத்துகிறது. 

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை துணை ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், பத்திரப்பதிவு துறை மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறையில் துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் மாவட்ட அதிகாரி என்பது போன்ற பல உயர் பதவிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்–1 தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், சமீபத்தில் 181 குரூப்–1 பணிகளுக்கான தேர்வுகளுக்காக முதல்நிலைத்தேர்வு நடந்தது. கடந்த 3–ந்தேதி நடந்த இந்த தேர்வை 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வில் மாணவர்கள் எழுத கொடுக்கப்பட்ட தேர்வுத்தாளில் 

200 கேள்விகள் கொடுக்கப்பட்டு அதற்கு சில விடைகள் கொடுக்கப்பட்டு எந்த விடை சரி என்று மாணவர்கள் குறிக்கவேண்டும். மிகவும் அதிர்ச்சித்தரத்தக்க வகையில் குரூப்–1 தேர்வுத்தாளிலேயே 10 விடைகள் தவறாக கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கேள்வியில் இந்தியாவில் மொத்தம் எத்தனை புலிகள் சரணாலயம் இருக்கிறது? என்பதற்கு 27 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறு. 50 என்பதுதான் சரியானது. இதுபோல, சபர்மதி ஆறு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாக ஓடுவதாக தவறாக கூறப்பட்டு இருக்கிறது. சபர்மதி ஆறு மத்தியபிரதேசம் மாநிலம் வழியாக ஓடவில்லை. தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதற்கான சரியான காரணம் சேரன்மகாதேவி குருகுலத்தில் நடந்த பாகுபாடு என்பதுதான் சரியான பதில். ஆனால் மகாத்மா காந்தியோடு ஏற்பட்ட கருத்து மோதல் என்று தவறாக கூறப்பட்டுள்ளது. இதுபோல, பல தவறுகள் தேர்வுத் தாளில் இருந்தன. இதேபோல் குரூப்–2 தேர்வுத்தாளிலும் பல தவறுகள் இருந்தன. இந்த முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் 9,050 பேரை தேர்ந்தெடுத்து முதன்மை தேர்வுக்கு அனுப்பவேண்டும். 

இந்தநிலையில், தேர்வாணையத்தின் தேர்வுத்தாளில் ஏற்பட்ட தவறுகளுக்காக மாணவர்களை பலி வாங்கிவிடக் கூடாது. இதற்கு என்ன செய்யவேண்டும்? என்பதை அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், குரூப்–1 தேர்வுக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படவேண்டும். ஆனால் இதற்கு முன்பு நடந்த தேர்வுக்கு 9–11–2016–ல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 25–1–2019–ல்தான் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்,

கோர்ட்டில் வழக்குகள் இருந்தாலும், ஆண்டுதோறும் தேர்வு நடத்தவேண்டும் என்பதில் தேர்வாணையம் உறுதியாக இருக்கவேண்டும். இதுபோல இப்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் மூலம் 8,427 போலீஸ்காரர்கள் வேலைக்கும், 2,008 சிறைக்காவலர் வேலைக்கும், 191 தீயணைப்பாளர் வேலைக்கும், 969 சப்–இன்ஸ்பெக்டர் வேலைக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளில் எந்தவித தவறுக்கும், குறைபாட்டுக்கும், புகாருக்கும் இடமில்லாமல், தகுதி உள்ளவர்களை மட்டும் தேர்ந் தெடுக்கும்வகையில் தேர்வுகள் நடத்தப்படவேண்டும் என்பதே வேலை தேடும் இளைஞர்களின் கோரிக்கையாகும். 

Next Story