தலையங்கம்

அரசு ஆணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரா? + "||" + Government Order is the name of the victim girl?

அரசு ஆணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரா?

அரசு ஆணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரா?
தமிழ்நாடு முழுவதும் ஏன், இந்தியா முழுவதுமே இப்போது பரபரப்பாக பேசப்படுவது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வழக்குத்தான்.
‘பேஸ்புக்’ மூலம் இளம் பெண்களுடனும், குடும்ப பெண்களுடனும் நட்பு பாராட்டி அவர்களை கும்பலாக சேர்ந்து பாலியல் கொடுமை செய்ததாக சொல்லப்படும் சம்பவங்கள்தான் இப்போது தினமும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக அரசு கடந்த 13–ந்தேதி ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அதில், கடந்த பிப்ரவரி மாதம் 24–ந்தேதி பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, ஒரு காரின் உள்ளே தன்னை சில நபர்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஒரு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பேஸ்புக் விவரங்கள் மற்றும் முகவரிகள், இன்டர்நெட் லாக்–கள் போன்றவற்றை ஆய்வுசெய்ய பல்வேறு நாடுகளில் உள்ள பேஸ்புக் சேவை வழங்குபவர்கள், மற்றும் இன்டர்நெட் சேவை வழங்குபவர்களிடம் விசாரணை செய்ய வேண்டிய திருக்கிறது. மேலும் இந்த வழக்கு சிறப்பு திறமை கொண்டவர்களாலும், தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களாலும் மிகத்தீவிரமாக விசாரிக்க வேண்டியது உள்ளதால், சி.பி.ஐ.க்கு மாற்றும்படி டி.ஜி.பி. கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்துள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரியின் பெயர், அந்த பெண்ணின் சகோதரர் பெயர் எல்லாம் தெரிவிக்கப் பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி, பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயரை வெளியே தெரிவிக்கக்கூடாது என்று இருக்கிறது. எனவே, இது விதிமீறல் என்று அரசியல் கட்சித்தலைவர்களும், பல சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆனால், ஒரு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும்போது, யார் கொடுத்த புகாரின்பேரில் இந்த வழக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்க புகார் கொடுத்தவர்களின் பெயரை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். ஆனால், இந்த உத்தரவை ‘மந்தனம்’ அதாவது ‘ரகசியம்’ என்ற அடிப்படையில் பொதுதளங்களில் வராமல் அரசு பார்த்து இருக்கலாம். 2012–ல் டெல்லியில் நடந்த நிர்பயா கொடூர வழக்கில் கூட முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப் பத்திரிகை களிலும் அவர் பெயர் பதிவு செய்யப்பட் டிருந்தது. ஆனால், பத்திரிகைகளும், ஊடகங்களும் மிகவும் பொறுப்புணர்ச்சியோடு அந்த பெண்ணின் பெயரை தெரிவிக்காமல், நிர்பயா அதாவது துணிச்சல் மிக்கவர் என்ற பெயரை சூட்டி, இன்றளவும் நிர்பயா என்றே கூறப்படுகிறது. 2018–ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில்கூட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவைக்கும் வகையில் அவர்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை பொதுமக்கள் பார்க்கக்கூடிய வகையில் பொதுதளங்களில் பதிவு செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறது. இனியாவது இந்த வழக்கு தொடர்பான மற்ற விவரங்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மிகத்துணிச்சலாக போலீசில் புகார் செய்த பெண்ணை மனதுக்குள் எல்லோரும் பாராட்டி, அவர் பெயர் வெளியே வராமல் பார்த்துக்கொள்வது பத்திரிகைகள், ஊடகங்கள், ஏன் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும். தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல்–டீசல் விலையை இன்னும் உயர்த்த முடியுமா?
பட்ஜெட் உரையின்போது நிர்மலா சீதாராமன், கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துகொண்டு இருக்கிறது. இது பெட்ரோல்–டீசல் மீதான கலால் வரியையும், மேல் வரியையும் மறுஆய்வு செய்யவேண்டிய ஒருநிலையை ஏற்படுத்துகிறது.
2. கிராமங்கள், கல்லூரிகளில் டிரைவிங் லைசென்சு
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போகிறது.
3. ஒற்றுமை தந்த வெற்றி
‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே, வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே’ என்று பழையகால திரைப்பட பாடல் ஒன்று உண்டு.
4. எம்.பி.க்களின் பாதயாத்திரை
மறைந்த பேரறிஞர் அண்ணா, தம்பிக்கு என்று எழுதும் கடிதங்கள் எல்லாம் உணர்வுபூர்வமாக இருக்கும். பண்டையகால சீன தத்துவ மேதை லாவோ சூ–வின் ஒரு அறிவுரையை அடிக்கடி கோடிட்டு காட்டுவார்.
5. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு
பா.ஜ.க. அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முறையில் சரக்கு சேவைவரி அமல்படுத்தப்பட்டது. மருத்துவக்கல்லூரி அனுமதிக்காக நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ தேர்வு வந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை