எட்டப்படுமா 8 வாரத்தில் தீர்வு?


எட்டப்படுமா 8 வாரத்தில் தீர்வு?
x
தினத்தந்தி 17 March 2019 10:30 PM GMT (Updated: 17 March 2019 11:50 AM GMT)

இந்தியாவில் 2 பிரச்சினைகள்தான் இதுவரையில் தீர்வுகாண முடியாமல் எல்லோரையும் தத்தளிக்க வைத்துள்ளது. ஒன்று காஷ்மீர் பிரச்சினை. மற்றொன்று அயோத்தி பிரச்சினை.

ந்தியாவில் 2 பிரச்சினைகள்தான் இதுவரையில் தீர்வுகாண முடியாமல் எல்லோரையும் தத்தளிக்க வைத்துள்ளது. ஒன்று காஷ்மீர் பிரச்சினை. மற்றொன்று அயோத்தி பிரச்சினை. காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானின் பின்புலத்தோடு பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்படும் பிரச்சினை. ஆனால் அயோத்தி பிரச்சினை நம்நாட்டிலேயே இருமத நம்பிக்கைகளை கொண்டவர்களுக்குள் உள்ள பிரச்சினையாகும். சகோதர பாசத்தோடு பழகிவரும் இரு மதத்தினர் இந்த ஒரு பிரச்சினையில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள். 

இந்துக்களை பொறுத்தமட்டில், சர்ச்சைக்குரிய இடம், ‘ராமர் பிறந்த பூமி’ என்பது அவர்களது நம்பிக்கையாகும். முஸ்லிம்களை பொறுத்தமட்டில், ‘1528–ம் ஆண்டு முகலாய பேரரசர் பாபர் கட்டிய மசூதி’ என்பதுதான். ஆக, இரு மதத்தினருக்கும் இடையில் இது தீராத பிரச்சினையாக தலையெடுத்துள்ளது. காலம்காலமாக தீர்வு காணமுடியாத இந்த பிரச்சினைக்கு 2010–ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 14 அப்பீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு இந்த பிரச்சினையில் ஒரு இறுதி தீர்ப்பை வழங்கிவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தநிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு சமரசக்குழுவை அமைத்துள்ளது. இந்த சமரசக்குழு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர், சென்னை ஐகோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சமரசக்குழு என்று நியமித்தால் காலம் இழுத்துக்கொண்டே போகும். ஆனால், அயோத்தியிலிருந்து 7 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பைசாபாத்தில் அமர்ந்து தன் பணிகளை ஆற்றும் இந்த சமரசக்குழு, 8 வாரத்தில் ஒரு தீர்வை காணவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரசக்குழுவின் பணிகள் எல்லாம் ரகசியமாகவே இருக்கவேண்டும். பத்திரிகைகளிலோ, டெலிவி‌ஷன்களிலோ எந்த செய்தியும் வராது. முதல் 4 வாரத்தில் இந்த முயற்சிகள் எந்த அளவில் உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

மே மாதம் மத்தியில் இந்த சமரசக்குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றால், மே மாதம் 13–ந்தேதி முதல் சுப்ரீம்கோர்ட்டின் கோடைவிடுமுறை தொடங்குவதால், இந்த அறிக்கையை ஜூலை மாதமே சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக்கொள்ளும். எனவே, இந்த பிரச்சினை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அயோத்தி பிரச்சினையில் 1986–ம் ஆண்டு முதல் பல சமரச முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. இப்போது சமரசக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த சமரசக்குழு ஆண்டாண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் அயோத்தி பிரச்சினைக்கு, இந்த 8 வாரத்தில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. இந்த பிரச்சினையை இனியும் இழுத்துக்கொண்டு போகாமல், இரு மதத்தினருமே கொஞ்சம் விட்டுக்கொடுத்து இதுவரை நமக்குள் இருந்த சர்ச்சைகள் போதும். இனி நல்லிணக்கத்தோடு வாழ்வோம். சகோதரர்களாக வாழ்வோம் என்ற உணர்வில், அவர்களும் இந்த பிரச்சினை தீர்வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

Next Story