பிரியங்கா காந்தியின் முதல் பிரசாரம்


பிரியங்கா காந்தியின் முதல் பிரசாரம்
x
தினத்தந்தி 18 March 2019 10:00 PM GMT (Updated: 18 March 2019 12:31 PM GMT)

தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி என்ன பேசப்போகிறார்? என்று காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாமல், நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

17–வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 11–ந் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரசுடன் முதல் வேட்பாளர் பட்டியல் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட ஒரு சில வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராகுல்காந்தி அமேதி தொகுதியிலும், சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுமே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் மிகத் தீவிரமாக களத்தில் இறங்கிவிட்டனர். அதுபோல காங்கிரஸ் தரப்பில் 58 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடந்து இருக்கிறது. ஆமதாபாத்தில் நடந்த இந்த கூட்டத்தையொட்டி, பிரமாண்டமான பேரணி நடந்தது. பிரதமரின் சொந்த மாநிலத்திலேயே காங்கிரஸ் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது. சோனியாகாந்தி, ராகுல்காந்தியோடு, பிரியங்கா காந்தியும் இந்த மேடையில் அமர்ந்து உரையாற்றி இருக்கிறார். 47 வயதான பிரியங்கா காந்தி இப்போது அரசியலுக்கு வருகிறார், அப்போது அரசியலுக்கு வருகிறார் என்று நீண்ட பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் தேர்தல் நேரங்களில் மட்டும் சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும் ஆதரவாக பணியாற்றினாரே தவிர, முழு மூச்சாக கட்சி பணியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் என்ன பேசப்போகிறார்? என்று காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாமல், நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசிய பேச்சு, மிகவும் அரசியல் நாகரிகத்தோடு இருந்தது. அர்த்தமுள்ள பேச்சாகவும் இருந்தது. பிரதமர் நரேந்திரமோடியை தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லியோ, தாக்கியோ பேசவில்லை. மிகவும் சிந்திக்கத்தக்க வகையில் அவர் பேச்சு இருந்தது. அவருடைய மென்மையான பேச்சு இதயங்களை கவர்ந்தது. ‘‘உங்கள் ஓட்டுதான் ஆயுதமாகும். அந்த ஆயுதம் யாரையும் காயப்படுத்தவோ, துன்பப்படுத்தவோ முடியாது. இந்த ஆயுதம்தான் உங்களையும், நாட்டையும் வலிமைபடுத்தும்’’ என்று பேசியிருக்கிறார். ‘‘சிந்தித்து முடிவு செய்யுங்கள். உங்களுக்கு முன் நிறைய பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாக்குறுதி அளித்த 2 கோடி வேலைவாய்ப்புகள் என்ன ஆனது?. ஒவ்வொருவருடைய வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று சொன்னது என்ன ஆனது?. பெண்களின் பாதுகாப்பு என்ன ஆனது?. நாட்டை பாதுகாத்து முன்னேற்றப்பாதையில் செல்வதை தவிர, வேறெந்த சிறந்த சேவை எதுவும் இல்லை’’ என்று பேசியிருக்கிறார்.

அரசியலுக்கு புதியவர் என்றாலும், அவருடைய பேச்சை இந்த தேர்தல் நேரங்களில் எல்லோரும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிய அரசியல் நாகரிகம் தலையெடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும். இப்போது தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பிரியங்கா காந்தி எல்லோருடைய பேச்சும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசாமல், கருத்து மோதல்கள், கொள்கை மோதல்களாக இருப்பதுபோல, தொடர்ந்து இந்த தேர்தல் முடியும்வரை இருக்க வேண்டும்.

Next Story