பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறுமா?


பெண்கள்  இடஒதுக்கீடு மசோதா  நிறைவேறுமா?
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-19T19:41:07+05:30)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி எந்த கட்சி தேர்தல் அறிக்கை என்றாலும், நிச்சயமாக பெண்களை கவர அறிவிப்புகள் இடம்பெறும்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி எந்த கட்சி தேர்தல் அறிக்கை என்றாலும், நிச்சயமாக பெண்களை கவர அறிவிப்புகள் இடம்பெறும். பெரிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்ற வாசகங்கள் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. நீண்ட பல ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்கள் இடஒதுக்கீடு வேண்டும் என்பது தவறாமல் பேசப்படும் கருத்தாக இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் 14–வது பிரிவில் பெண்களுக்கு சமஉரிமை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மறைந்த முதல்–அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றினர். 1996–ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா இதை 50 சதவீதமாக உயர்த்தினார். ஆனால் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இந்த அரசியல் சட்ட மசோதா நிறைவேறவேண்டும். இந்த இடஒதுக்கீடு மசோதா தேவகவுடா பிரதமராக இருந்தநேரத்தில், 1996–ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 12–ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. 22 ஆண்டுகள் 4 மாதங்கள் கடந்தநிலையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதன்பிறகு 5 நாடாளுமன்றங்கள் முடிந்துவிட்டது. நடந்துமுடிந்த 16–வது நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் நிறைவேறியதே தவிர, மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. முதல் நாடாளுமன்றத்தில் 24 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 16–வது நாடாளுமன்றத்தில் 62 பெண் உறுப்பினர்களாகத்தான் உயர்ந்தது. அதாவது 11.4 சதவீத உறுப்பினர்கள்தான் பெண்களாக இருந்தார்கள். 33 சதவீதம் எங்கே இருக்கிறது?, 11.4 சதவீதம் எங்கே இருக்கிறது?. 1996–ல் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 28 கோடியே 20 லட்சமாக இருந்தநிலையில், தற்போது 43 கோடிக்கு மேல் வந்துவிட்டது. இந்தநிலையில், பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான குரல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றால், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும். 

தற்போதைய நிலவரப்படி, மேற்குவங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்த வேட்பாளர் பட்டியலில், மொத்தம் உள்ள 42 வேட்பாளர்களில் 17 பேர் பெண்களாக அறிவித்துள்ளார். இதுபோல, ஒடிசா மாநிலத்தில் உள்ள பிஜூ ஜனதாதள கட்சியிலும் 40 சதவீதத்திற்கு மேல் பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மட்டும் பெண் வேட்பாளர். தி.மு.க.வை எடுத்துக்கொண்டால் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவர் மட்டும் பெண்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட 28 வேட்பாளர்களில் சாருபாலா தொண்டைமான், ஏ.எஸ்.பொன்னுத்தாய், டி.செங்கொடி ஆகிய 3 பெண் வேட்பாளர்கள். மற்ற சில கட்சிகளில் பெண் வேட்பாளர்களே இல்லை. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆண்களோ, பெண்களோ எந்த உறுப்பினர்களாக இருந்தாலும், 17–வது நாடாளுமன்றம் கூடிய உடனேயே பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றச்செய்து தமிழகம்தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை சட்டமாக்க முக்கிய காரணமாக இருந்தது என்று எதிர்காலம் சொல்லத்தக்க வகையில் முயற்சிகளை எடுக்கவேண்டும். மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை வெறும் ஏட்டளவில் மட்டுமல்லாமல், கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

Next Story