இரு தேர்தல் அறிக்கைகள்


இரு தேர்தல் அறிக்கைகள்
x
தினத்தந்தி 20 March 2019 10:30 PM GMT (Updated: 20 March 2019 1:10 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க., தி.மு.க. இருகட்சிகளுமே நேற்று முன்தினம் ஒரேநாளில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க., தி.மு.க. இருகட்சிகளுமே நேற்று முன்தினம் ஒரேநாளில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. நிச்சயமாக இரு தேர்தல் அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை, இரு கட்சிகளாலும் அவர்களாகவே நிறைவேற்ற முடியாது. அவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியால் மட்டுமே முடியும். அந்தவகையில் அந்த தலைமை பொறுப்பில் உள்ள கட்சிகளிடம் கலந்து ஆலோசித்து இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டதா? என்று தெரியவில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நிச்சயமாக கதாநாயகனாகவும் இருக்கும், கதாநாயகியாகவும் இருக்கும். வில்லனாக இருக்காது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 

அ.தி.மு.க., தி.மு.க. இரு தேர்தல் அறிக்கைகளிலுமே தமிழக மக்களின் மனம்கவரும் பல அறிவிப்புகள் இருந்தன. இரு கட்சிகளுமே மக்களின் நாடித்துடிப்பை அறிந்த கட்சிகள் என்பதால், பொதுவான பல வாக்குறுதிகள் இரு தேர்தல் அறிக்கைகளிலும் இருந்தன. தி.மு.க.வை பொறுத்தமட்டில், 100 அம்சங்களை அடிப்படையாக வைத்து தன் வாக்குறுதிகளை அளித்துள்ளது. நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க இந்தியா முழுவதும் 10–ம் வகுப்புவரை படித்துள்ள 1 கோடி இளைஞர்களை சாலை பணியாளர்களாக நியமிக்க மத்திய அரசாங்கத்தை தி.மு.க. வலியுறுத்தும், அனைத்திந்திய அளவில் 10–ம் வகுப்புவரை படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்களை மக்கள்நல பணியாளர்களாக நியமிக்க வலியுறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ள அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டத்தைப்போக்க பிலிப்பைன்ஸ் நாட்டின் டெஸ்டா நிறுவனம் அந்த நாட்டு இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உலகமெங்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் வழங்கிவரும் திறன் மேம்பாட்டு பயிற்சியை மாதிரியாகக்கொண்டு, எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுத்திட்டம் உருவாக்கப்பட வலியுறுத்தப்படும் என்று இருந்தது. 

இதுமட்டுமல்லாமல், கோதாவரி–காவிரி நதிகள் இணைப்பு திட்டம், விவசாய கடன் ரத்து, கச்சத்தீவு மீட்பு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்கள் விடுதலை, மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுதல், நீட் தேர்வு ரத்து, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றம், தமிழ்மொழியை அலுவல் மொழியாக மாற்றுதல், வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்துதல், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் நாட்களை உயர்த்துதல், கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பு ஆகிய வாக்குறுதிகள் அ.தி.மு.க., தி.மு.க. இரு தேர்தல் அறிக்கைகளிலுமே இடம்பெற்றுள்ளன. இதுதவிர இரு கட்சி தேர்தல் அறிக்கைகளிலும், மேலும் பல வாக்குறுதிகள் தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளன. இரு தேர்தல் அறிக்கைகளுமே தமிழக மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. இரு அறிக்கைகளுமே கதாநாயகன்தான், கதாநாயகிதான். எதுவும் வில்லன் இல்லை. பொதுவாக தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. அடுத்த தேர்தலில் மக்களை சந்திக்கும்போது, கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளில் எதை எதை நிறைவேற்றினோம் என்ற சாதனை பட்டியலை வெளியிடவேண்டும். அந்தவகையில், இந்த இருகட்சிகளும் இடம்பெற்றுள்ள எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், தமிழக மக்களுக்கு உறுதி அளித்த வாக்குறுதிகளைக்கொண்ட தங்கள் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றுவதையே முழுமுதற் கடமையாகக்கொண்டு செயல்படவேண்டும்.

Next Story