வறட்சியால் தத்தளிக்கும் தமிழ்நாடு


வறட்சியால் தத்தளிக்கும் தமிழ்நாடு
x
தினத்தந்தி 21 March 2019 10:30 PM GMT (Updated: 21 March 2019 2:10 PM GMT)

தமிழ்நாடு எப்போதுமே நீர்வளத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலம் அல்ல. இங்கே தாமிரபரணி தவிர வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் தொடங்கி தமிழ்நாட்டிலேயே கடலில் கலப்பது இல்லை.

மிழ்நாடு எப்போதுமே நீர்வளத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலம் அல்ல. இங்கே தாமிரபரணி தவிர வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் தொடங்கி தமிழ்நாட்டிலேயே கடலில் கலப்பது இல்லை. அனைத்து ஆறுகளும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை நம்பித்தான் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மழை மிகுதியாக பெய்தால்தான் தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் நிரம்பும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், குடிநீருக்குக்கூட மழை மிகமிக முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், தமிழ்நாட்டில் தொடர்ந்து எல்லா ஆண்டுகளிலும் மழைவளம் சிறப்பாக இருப்பதில்லை. தமிழ்நாட்டில் சராசரி ஆண்டு மழைஅளவு 920.90 மி.மீட்டர் ஆகும். குளிர்காலம், கோடைகாலம், தென்மேற்கு, வடகிழக்கு பருவகாலங்களில் பெய்யும் மழைதான் நம் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. 

மொத்த மழைப்பொழிவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 3 சதவீத மழையும், மார்ச் முதல் மே மாதங்களில் 14 சதவீத மழையும், ஜூன் முதல் செப்டம்பர் மாதம்வரை 35 சதவீதமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 48 சதவீத மழையும் வழக்கமாக பெய்யவேண்டும். ஆனால் இந்த ஆண்டு கோடைகால மழையைத்தவிர மற்ற 3 மழை காலங்களிலும், அதாவது குளிர்காலத்தில் 47 சதவீதமும், தென்மேற்கு பருவமழை 12 சதவீதம், வடகிழக்கு பருவமழை 24 சதவீதம் பற்றாக்குறையாக பெய்துள்ளது. இது சராசரி பற்றாக்குறைதான். ஆனால் 17 மாவட்டங்களில் 19 சதவீதம் முதல் 59 சதவீதம் வரையும், மேலும் 7 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின்போது இயல்பான மழை இருந்தாலும், ஆண்டு சராசரி மழைப்பொழிவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் மாவட்ட அளவில் மழைப்பொழிவு இயல்பாக இருந்தாலும், இந்த மாவட்டங்களில் உள்ள 38 ஊராட்சி ஒன்றியங்களில் மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. எனவே, இந்த பகுதிகள் அனைத்தையும் நீரியல் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், உடனடியாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவேண்டும். மாநில அரசில் இருந்து வறட்சி நிவாரணத்திற்கு நிதிகள் ஒதுக்கினாலும், மத்திய அரசாங்கத்திடம் உடனடியாக வறட்சி நிவாரண நிதியைக் கோரி பெறவேண்டும். தமிழ்நாட்டில் இந்த 24 மாவட்டங்களிலும், 7 மாவட்டங்களில் உள்ள 38 ஊராட்சி ஒன்றியங்களிலும் நிலவும் கடுமையான வறட்சியை கருத்தில் கொண்டு, தேர்தல் கமி‌ஷனிடம் கூறி வறட்சி நிவாரண பணிகளுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவேண்டும். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளையை தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும். அனைத்து ஏரிகள், கால்வாய்கள், குளங்கள், வாய்க்கால்கள் எல்லாம் வறண்டு போயிருக்கும் நிலையில், தூர்வாருவதற்கு இதுதான் சரியான நேரம். இதுமட்டுமல்லாமல், மழைநீர் சேமிப்பு திட்டத்தை வேகமாக செயல்படுத்தவேண்டும். 100 நாள் வேலைதிட்ட நாட்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். மொத்தத்தில், தேர்தல் பணிகளில் இருக்கும் வேகத்தைவிட பலமடங்கு வறட்சி நிவாரணப்பணிகளில் அனைவரும் ஈடுபடவேண்டும்.

Next Story