ரகசியம் காக்கப்பட வேண்டும்


ரகசியம் காக்கப்பட வேண்டும்
x
தினத்தந்தி 22 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-22T19:19:41+05:30)

தமிழ்நாடு முழுவதும் இப்போது பொள்ளாச்சி சம்பவம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

மிழ்நாடு முழுவதும் இப்போது பொள்ளாச்சி சம்பவம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் ஒரு கும்பல் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணிடம் நட்பு பாராட்டி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது, பணம் பறிக்க முயன்றது என்று அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ்படையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் அதிகாரி, நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, ஒருமுறை அல்ல, இருமுறை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை சொன்னதும், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய பிறப்பித்த அரசு உத்தரவில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டதும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியே சொன்னால், அவமானத்திற்கு பயந்து எந்த பெண் இதுபோன்ற சம்பவங்களில் புகார் கொடுக்க வருவார்? என்றும் கேள்வி எழும்புகிறது. 

இந்தநிலையில், பொள்ளாச்சி சம்பவத்தையொட்டி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அந்தப்பகுதியில் இதுபோன்ற பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட நிலைகுறித்து 100–க்கும் மேற்பட்ட டெலிபோன் தகவல்கள் வந்துள்ளன. தற்போது ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியே தெரிவிக்கக்கூடாது என்ற பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, போலீஸ் டி.ஜி.பி. கற்பழிப்பு வழக்குகள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது, அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயர்களையோ, அவர்களது அடையாளங்களையோ வெளியிடக்கூடாது. கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கும்போது, பாதிக்கப் பட்டவர்களின் பெயர் விவரங்களை சீலிட்ட கவர்களில் அனுப்பலாம். பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் பெயர் விவரங்களை வெளியிட்டால் அது கடுமையான குற்றமாக பார்க்கப்படும் என்று அனைத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுபோல பேஸ்புக், யூ–டியூப், மற்றும் வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான எந்த வீடியோக்களையும் பகிரக்கூடாது என்று கேட்டு இருக்கிறது. ஐகோர்ட்டு மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யின் உத்தரவுகள் உறுதியாக போலீஸ் அதிகாரிகளால் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். நாம் அனுப்பும் புகார்கள், கொடுக்கும் தகவல்களில் நமது பெயர் வந்துவிடாது என்ற ஒரு நம்பிக்கை வந்தால்தான், இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் புகார் கொடுக்கமுடியும். 

சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கு மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக 94884 42993 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது cbcidcbecity@gmail.com என்ற இணையதள முகவரியிலோ தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். இதுபோன்ற புகார்களை தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வழங்க இந்த செல்போன் எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்க வேண்டும். இதுபோன்ற புகார்களை கொடுக்கும் பெண்களின் பெயர் விவரங்கள் வெளியே வராமல் ரகசியம் உறுதியாக காக்கப்படவேண்டும். அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்கவேண்டும் என்றால், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கக் கூடாது. அவர்கள் வசிக்கும் இடத்திற்கே பெண் போலீஸ் அதிகாரிகளை ‘மப்டி’யில் அனுப்பி விசாரிக்கவேண்டும். கூடுமானவரை அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போதும் அவர்களை நீதிமன்றத்திற்கு வரவழைக்காமல் பெண் நீதிபதிகளை வைத்து ‘ஸ்கைப்’ போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வீட்டில் இருந்தே பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியங்கள் அளிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். 

Next Story