மக்களை பாதிக்கும் தேர்தல் நடத்தை விதிகள்


மக்களை பாதிக்கும் தேர்தல் நடத்தை விதிகள்
x
தினத்தந்தி 24 March 2019 9:30 PM GMT (Updated: 2019-03-25T00:44:27+05:30)

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 10-ந்தேதி தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது. மே 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தேர்தல் கமிஷன் அறிவிக்கும்வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது வரவேற்கத்தகுந்தது. ஆனால், சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்படும்வகையில் சில விதிகள் இருப்பது அன்றாட வாழ்வில் பல சிரமங்களை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரேயொரு விதியை குறிப்பிடவேண்டும் என்றால், யாரும் ரூ.50 ஆயிரத்துக்குமேல் கையில் எடுத்துச்செல்லக்கூடாது. அதற்குமேல் ஒரு ரூபாய் கையில் வைத்திருந்தாலும், அதுகுறித்த கணக்கு விவரங்களை தெரிவித்த பிறகுதான் திரும்பப்பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்று பணம், நகை மற்றும் பொருட்கள் கொண்டுபோவதை தடுப்பதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 3 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 3 பறக்கும் படைகள் என்ற அளவில் மொத்தம் 702 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் மட்டும் 77 பறக்கும் படைகள் மற்றும் அதற்கு ஈடான எண்ணிக்கையில் கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் கொண்டுபோகும் வாகனங்களை மட்டுமல்லாமல், அனைத்து வாகனங்களையும் சோதனையிடுகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் இருந்தால் அந்த பணத்தை கைப்பற்றி கருவூலத்தில் செலுத்திவிடுகிறார்கள். அதன்பிறகு தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்து அவர் உத்தரவிட்டால்தான் பணம் திரும்ப கிடைக்கும். பலநேரங்களில் தங்கள் பணத்தை திரும்பபெற மாதக்கணக்கில் ஆகிறது. இந்த தடை உத்தரவு வியாபாரிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு வியாபாரிகளை பெரிதும் பாதிக்கிறது. அன்றாடம் ஒரு சிறு கடையில் இருந்து மார்க்கெட்டுக்கு போய் பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் சர்வசாதாரணமாக ரூ.50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம் கொண்டுபோக வேண்டியது இருக்கும். பொதுமக்களும் அவசர தேவைக்காக பல செலவுகளை மேற்கொள்ள ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டுபோனால் அவர்களுக்கும் இதே கதிதான்.

இந்தநிலையில், தமிழக தேர்தல் அதிகாரியிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஒரு மனுவை கொடுத்துள்ளார். அதில், ‘தமிழகத்தில் பல லட்சம் வணிகர்கள் அன்றாட வாழ்வுக்காக காய்கறி, பழங்கள், பால் மற்றும் விவசாய விளைபொருட்கள் போன்றவற்றை விற்று வருகின்றனர். குறிப்பாக இவர்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வராதவர்கள். தேர்தல் பறக்கும் படை நடத்தை விதிகளை காரணம்காட்டி சிறு, குறு விவசாயிகள் கொண்டு செல்லும் ரொக்கப்பணத்தை கைப்பற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை ஏற்க முடியாது. சிறு, குறு வணிகம் நடக்கும் இடங்களிலேயே பணம் கைப்பற்றப்படுகிறது. எனவே, அரசியல்நோக்கில் எடுத்துச்செல்லப்படும் தொகைகளை மட்டுமே கைப்பற்றவேண்டும். வணிக தொடர்புடைய பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவேண்டும். மேலும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள பணப்பரிமாற்றம் செய்ய உச்சவரம்பு ரூ.50 ஆயிரம் என்பது இன்றைய காலச்சூழலுக்கு ஏற்புடையதல்ல. குறைந்தபட்சம் ரூ.2 லட்சம்வரை சில்லரை மற்றும் சிறு, குறு விவசாயிகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். நிச்சயமாக இது அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் மனதில் இருந்து எழும் குரலாகும். தேர்தல் கமிஷன் இதை உடனடியாக பரிசீலித்து, இந்த உச்சவரம்பை உடனடியாக உயர்த்தவேண்டும். தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் மட்டுமே பொருந்தும்வகையில் இருக்கவேண்டுமே தவிர, பொதுமக்களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

Next Story