இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்போம்


இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்போம்
x
தினத்தந்தி 25 March 2019 10:00 PM GMT (Updated: 25 March 2019 3:20 PM GMT)

ஒரு நாட்டில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால், தொழிலும், விவசாயமும் வளரவேண்டும். ‘இவை இரண்டுமே இரண்டு கண்கள் போன்றதாகும்.’ இரண்டும் வளர்ச்சி என்ற ஒரே இலக்கைத்தான் ஒன்றுசேர்ந்து பார்க்கமுடியுமே தவிர, திசைமாறி செல்லமுடியாது.

இரு கண்களில் ஒரு கண் ஒருபக்கமும், மற்றொரு கண் மறுபக்கமும் பார்க்க முடியாது என்பதுபோல, நாட்டில் வளர்ச்சி ஏற்பட இரு துறைகளும் ஒன்றாக வளர்ச்சி அடையவேண்டும். ஆனால், சமீபகாலமாக வேளாண்துறையின் வளர்ச்சி வேகமாக இல்லை. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ள மக்கள் இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயம் வளராததால் மக்கள் கிராமங்களைவிட்டு, நகரங்களை நோக்கி நகரும்நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. போதியஅளவு நீர்ப்பாசன திட்டங்கள் இல்லை, விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைப்பதில்லை. விதை, உரம், பூச்சிமருந்து விலையெல்லாம் உயர்ந்துவிட்டது. விளைச்சலில் கிடைக்கும் வருமானத்திற்கும், சாகுபடிக்காக செலவிடும் செலவுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

இந்தநிலையில், நாடுமுழுவதும் இயற்கை வேளாண்மை இப்போது ஒரு முக்கியத்துவத்தை கண்டுள்ளது. இயற்கை வேளாண்மை விளைபொருட்களைத்தான் சாப்பிடவேண்டும் என்ற விழிப்புணர்வு பெருகிவிட்டது. இயற்கை வேளாண்மையை ஏராளமான இளைஞர் சமுதாயம் கையில் எடுத்துள்ளது. இயற்கை வேளாண்மை செய்யும்போது, அதற்கு உரமும், இயற்கை உரங்கள்தான் போடவேண்டும் என்றநிலையில், கால்நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. கால்நடைகளை வளர்க்கும்போது, விவசாயிகளின் வருமானமும் உயர்கிறது. இயற்கை வேளாண்மையை ஒரு விவசாயி மேற்கொள்ளும்போது, அந்த விவசாயிடம் உள்ள பாரம்பரிய விதைகள், இயற்கை உரம், இயற்கையான பூச்சிமருந்துகளில் அந்த விவசாயி கவனம் செலுத்துகின்ற நேரத்தில், அந்த விவசாயியின் பணமும் அவரைவிட்டும், அவர் வாழும் ஊரைவிட்டும் வெளியே செல்வதில்லை. ஏனெனில், பூச்சிமருந்துக்கோ, உரத்துக்கோ விலைகொடுத்து வாங்கவேண்டியநிலை அவருக்கு இருக்காது. அப்படியே வாங்கவேண்டும் என்றாலும் அவரது பணம் அந்த ஊரில்தான் சுற்றிச்சுழலும். 

இந்த சூழ்நிலையில், இயற்கை வேளாண்மையை மேலும் மேம்படுத்தும்வகையில் ஒரு புதிய விவசாய ஏற்றுமதி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பல விளைபொருட்களின் ரகங்களுக்கு ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, விவசாய ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்குவதுதான் இதன் நோக்கமாகும். இதன்படி, பெரும்பாலான இயற்கை விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட விவசாய விளைபொருட்களுக்கு இருக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானம் 2022–ல் இரட்டிப்பாக்கப்படும் என்ற இலக்கை நோக்கிச்செல்லும் முயற்சியாக இந்த ஏற்றுமதிக்கொள்கை கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஏறத்தாழ ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்குமேல் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டைவிட, ஏறத்தாழ 20 சதவீதம் இந்த ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது. 2022–ல் வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதியை ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்குமேல் உயர்த்த இந்த கொள்கையின் மூலம் திட்டமிட்டுள்ளது. உலக நாடுகளில் பலவற்றில் இயற்கை விவசாய உணவு பொருட்களுக்கே அதிக கிராக்கி இருப்பதால், உடனடியாக விவசாயிகள் பயனடையும் வகையில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும். தமிழக வேளாண்மைத்துறை இதை முக்கிய கடமையாகக்கொண்டு 2022–ல் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியின் பெரும்பங்கு தமிழகத்தில் இருந்து கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அதற்கு இப்போதே திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.

Next Story