வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்களா?


வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்களா?
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 26 March 2019 3:30 PM GMT)

தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் புதிய வாக்காளர்களின் முடிவை வைத்துதான் நிர்ணயிக்கப்பட இருக்கிறது.

2017–ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, ஒரு நல்லகருத்தை சொன்னார். ‘‘2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் என்பது எப்போதும் வந்துபோகிற ஒரு சாதாரண புத்தாண்டு அல்ல. 21–ம் நூற்றாண்டு, அதாவது 2000–ம் ஆண்டு பிறந்த வாக்காளர்கள் முதல்முறையாக ஓட்டுப்போட தகுதி படைத்தவர்களாகும் நாள்’’ என்றார். இந்தவகையில், இந்த தேர்தலில் மொத்தம் உள்ள ஏறத்தாழ 90 கோடி வாக்காளர்களில், 8 கோடியே 40 லட்சம் பேர் புதிதாக 18 வயதைக்கடந்து இப்போது முதல்முறையாக ஓட்டுப்போடப்போகும் வாக்காளர்கள் ஆவர். அதாவது மொத்தம் வாக்காளர்களில், இவர்கள் 9 சதவீதம் பேர் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியையும் எடுத்துக்கொண்டால், சராசரியாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 696 வாக்காளர்கள் இந்த அடிப்படையில் புதிதாக சேர்ந்துள்ள வாக்காளர்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சம். இதில் இப்போது 18 வயது முடிந்ததில் இருந்து முதல் முறையாக ஓட்டுப்போடப்போகும் புதிய வாக்காளர்கள் என்ற பட்டியலில் வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் 45 லட்சம் ஆகும். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1,12,500 புதியவாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில், 188 தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 92 தொகுதிகளில் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவை பார்த்தாலும் முதல்முறையாக ஓட்டுப்போட்டவர்களில் தேசிய சராசரி சதவீதத்தைவிட அதிகமாக ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். ஆக நிச்சயமாக முதல்முறையாக ஓட்டுப்போடும் இளைஞர்களின் ஓட்டு யாருக்கு பெருமளவில் போய்விழுகிறதோ?, அந்த கட்சிக்குத்தான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்த புதியவாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்று பார்த்தால், நிச்சயமாக வேலைவாய்ப்புதான் முதலிடம் வகிக்கும். ஏனெனில், படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் இவர்கள் மிக ஆர்வமுடன் இருக்கிறார்கள். அந்தவகையில், இன்னும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடாத பா.ஜ.க.வும், காங்கிரசும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வேலைவாய்ப்பு குறித்து உறுதியான, தெளிவான புதிய வாக்காளர்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில் வாக்குறுதிகளை அளித்தால்தான், இந்த புதியவாக்காளர்களின் ஓட்டுகளை பெறமுடியும். 

இப்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களிடையே 6.2 சதவீதம் பேர் வேலைகிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால், தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் தயாரித்து, தேசிய புள்ளியியல் ஆணையம் ஒப்புதல் அளித்து, இன்னும் வெளிவராமல் இருக்கும் அறிக்கையில் சில தகவல்கள் வெளியே வந்திருக்கின்றன. அதில், நகர்ப்புறங்களில் இளைஞர்களிடையே வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை 7.1 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.8 சதவீதமாகவும் இருக்கிறது. ஏற்கனவே வேலையில் இருந்தவர்களிடையே 4 கோடியே 30 லட்சம் வேலைவாய்ப்புகள் இப்போது இழந்துவிட்ட சூழ்நிலையில் இருக்கிறது. எனவே எந்தக்கட்சி என்றாலும் சரி, இவர்கள் நம் எதிர்காலத்திற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறதோ, அந்தக்கட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் முதல்முறையாக வாக்களிக்கப்போகும் வாக்காளர்களின் ஆதரவும் கிடைக்கும். புதிய வாக்காளர்களின் இப்போதைய கேள்வி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்களா?, நீங்கள் உருவாக்குவீர்களா? என்பதுதான்.

Next Story