வந்துவிட்டது ‘லோக்பால்’


வந்துவிட்டது ‘லோக்பால்’
x
தினத்தந்தி 27 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-27T19:04:12+05:30)

லோக்பால் அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையில் முதல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஊழலை எல்லாமட்டத்திலும் ஒழிக்கவேண்டும், ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், ஊழல் பற்றிய செய்திகள் வெளியே வந்ததே தவிர, வலுவில்லாத சட்டங்களால் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலைதான் இருந்தது. இந்த நிலையில், வலுவான சட்டம் வேண்டும் என்ற அடிப்படையில், 1968–ம் ஆண்டு இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2011–ம் ஆண்டுகளில் இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், ராஜீவ்காந்தி, வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சி காலங்களில் லோக்பால் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

ஆனால், எந்தவித மசோதாவும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், 76 வயதான காந்தியவாதி அன்னா ஹசாரே 2013–ம் ஆண்டு மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம், அதற்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் ஆதரவும் வேறுவழியில்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேறியதே தவிர, இந்த அமைப்பு உருவாக்கப்படாமல் இருந்தது. 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17–ந் தேதி மாநிலங்களவையிலும், அடுத்தநாள் டிசம்பர் 18–ந் தேதி மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்கப்படவேண்டும். எப்படி 2014–ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கடைசி நேரத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதோ, அதுபோல இப்போது கடந்த 19–ந் தேதி லோக்பால் அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையில் முதல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் ஒழிப்பு அமைப்பில் நீதித்துறையை சார்ந்த 4 உறுப்பினர்களும், 4 பேர் நீதித்துறையை சாராத உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைவரும், உறுப்பினர்களும் பதவி ஏற்று விட்டார்கள். இதில் ஒரு உறுப்பினராக தமிழக காவல்துறையில் எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் நேர்மையுடன் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரமும் உள்ளார். அர்ச்சனா ராமசுந்தரம் தமிழக காவல்துறையில் பணியாற்றும்போது நிறைய  சவால்களை  சந்தித்தவர். சி.பி.ஐ.யில் அவர் பணியாற்றிய நேரத்தில்தான் முத்திரைத்தாள் மோசடியை திறமையாக புலன்விசாரணை செய்து கண்டுபிடித்தார். டி.ஜி.பி.யாக ஓய்வு பெறும்போது எல்லை பகுதிகளுக்கான எஸ்.எஸ்.பி. போலீஸ் படையின் தலைவராக இருந்தார். இவர் இந்த உயரிய அமைப்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது நிச்சயமாக தமிழர்களுக்கெல்லாம் பெருமையாகும். 

பிரதமர் உள்பட அனைத்து பொது ஊழியர்களையும் விசாரணைக்கு உட்படுத்தும் அமைப்பு லோக்பால். எந்தவொரு புகார் கொடுக்கப்பட்டாலும் பூர்வாங்க விசாரணை, விசாரணை அமைப்புகளின் விசாரணை, நீதிமன்ற விசாரணை என ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாக எந்த தாமதமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. பொய் புகார்களுக்கும் நிச்சயமாக இடம் இருக்காது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது வரவேற்புக்குரியது. ஆனால், உடனடியாக இதற்குகீழ் உள்ள பிரிவுகளை எல்லாம் லோக்பால் அமைப்பு இயங்க செய்ய வேண்டும். லோக்பால் போன்று லோக் ஆயுக்தா அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வுசெய்து தமிழ்நாட்டிலும் முதல்–அமைச்சர் தலைமையிலான குழு கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. உடனடியாக அந்த அமைப்பும் செயல்பாட்டுக்கு வரவேண்டும். லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் ஒரேநேரத்தில் வேகமாக இயங்கும் நிலையில், நிச்சயமாக அவை ஊழலை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கத்தொடங்கும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story