சொல்லாதீர்கள் – செயலில் காட்டுங்கள்!


சொல்லாதீர்கள் – செயலில் காட்டுங்கள்!
x
தினத்தந்தி 29 March 2019 10:15 PM GMT (Updated: 29 March 2019 3:08 PM GMT)

உன் நண்பனை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அண்டை வீட்டுக்காரர்களை நீ தேர்ந்தெடுக்க முடியாது என்பது பழமொழி. இது நிதர்சனமான உண்மையாகும்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளை நாம் நிச்சயமாக மாற்றமுடியாது. காலம் காலமாக அண்டை நாடுகளாகத்தான் இருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரரோடு நல்ல நட்பு இருந்தால்தான் பிரச்சினை இல்லாமல் இருக்கும். அதுபோலத்தான் பக்கத்து நாடுகளுடனும் நல்லுறவோடு இருக்கவேண்டும் என்பதை இந்தியா எப்போதும் விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தானை பொறுத்தமட்டில், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டதிலிருந்து பிரச்சினைக்குமேல் பிரச்சினை யாகவே இருக்கிறது. அழகே உருவான காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் ஒருபுறம், அவர்களுக்கு புகலிடம் கொடுத்து, பயிற்சிகளை அளித்து, பாகிஸ் தானின் உளவுப்பிரிவு மூலமாக இந்திய எல்லைக்குள் ஊடுருவச்செய்வது மற்றும் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுவது என்று தொடர்கதையாக இருக்கிறது. கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்–இ–முகமது இயக்க பயங்கர வாதியால் 40 மத்திய ரிசர்வ் போலீஸ்படையினர் கொடூரமாக கொல்லப்பட்டது, ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் சுக்குநூறாக்கி விட்டது. பாகிஸ்தானில் ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதல் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை விமானியான அபிநந்தன் சென்ற விமானம், பாகிஸ்தான் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரத்தில், பாராசூட் மூலம் இறங்கிய அபிநந்தனை பாகிஸ்தான் கைதுசெய்தது. ஆனால் வியக்கத்தக்க வகையில் 2 நாளில் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கை களுக்கு பாகிஸ்தான் தன் மண்ணை பயன்படுத்த அனுமதிக்காது. இது புதிய பாகிஸ்தான். புதிய பாகிஸ்தானுக்கு ஒரு புதிய நேரம். புதிய பாகிஸ்தான் வளமாகவும், நிலையாகவும், அமைதியாகவும் இருக்கும். கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை நாங்கள் திருப்பி அனுப்பினோம் என்பது நாங்கள் போரை விரும்பவில்லை என்பதற்காகத்தான். நாங்கள் சமாதானத்தைத்தான் விரும்புகிறோமே தவிர, போரை அல்ல. புலவாமா சம்பவம் தொடர்பாக புலன்விசாரணைக்கு இந்தியாவுக்கு உதவ முடிவெடுத்துள்ளோம் என்று சிந்து பகுதியில் உள்ள சாச்ரோ பகுதியில் நடந்த பேரணியில் பேசினார். ஆனால், இப்போது சொன்னதுக்கு மாறாக இந்தியா குறிப்பிட்ட 22 இடங்களில் ஆய்வு செய்தோம். அங்கு பயங்கரவாத முகாம்களே இல்லை என்று மழுப்பி யிருக்கிறது. புலவாமா சம்பவத்துக்குப்பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டது. ஆனால், பாகிஸ்தான் தனது தூதரை திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியதை தொடர்ந்து, இந்தியாவும் தனது தூதரை மறுபடியும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கிறது. 

உலகநாடுகள் எல்லாம் இந்தியாவும், பாகிஸ்தானும் நல்லுறவோடு இருக்கவேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், இம்ரான்கானின் பேச்சு கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இன்னும் ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கைது செய்யப்படவில்லை. ஜமாத்–உத்–தவா மற்றும் பலா–இ–இஸானியத் பவுண்டேசன் தலைவர் மற்றும் 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரண கர்த்தாவாக இருந்த ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அங்கு இயங்கும் இந்த பயங்கரவாத இயக்கங்களையும், தேஷ் அல்கொய்தா, லஷ்கர்–இ–தொய்பா, ஹக்கானி நெட்வொர்க் மற்றும் தலீபான் இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டினால்தான் புதிய பாகிஸ்தான் என்று சொல்வதற்கு பொருள் இருக்கும். இம்ரான்கான் சொன்னதை, சொல்வதை யெல்லாம் செயலில் காட்டினால்தான், புதிய பாகிஸ்தானோடு நல்லுறவு கொள்ளமுடியும். 

Next Story