இந்தியாவுக்கு பெருமை


இந்தியாவுக்கு பெருமை
x
தினத்தந்தி 31 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-31T22:51:52+05:30)

கடந்த மாதம் 27–ந் தேதி அன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில், ‘பகல் 11.45 மணி முதல் 12 மணிவரை நாட்டு மக்களிடம் உரையாற்றி ஒரு முக்கியமான செய்தியை சொல்லப்போகிறேன்.

டந்த மாதம் 27–ந் தேதி அன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில், ‘பகல் 11.45 மணி முதல் 12 மணிவரை நாட்டு மக்களிடம் உரையாற்றி ஒரு முக்கியமான செய்தியை சொல்லப்போகிறேன். என்னுடைய இந்த உரையை டெலிவி‌ஷனில், ரேடியோவில் மற்றும் சமூகவலைத்தளங்களில் கவனியுங்கள்’ என்று அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 2016–ம் ஆண்டு இதுபோல டெலிவி‌ஷனில் அறிவித்ததுபோல, ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்போகிறாரோ? என்ற அச்சத்தில் ஏ.டி.எம்.கள் முன்பு பணம் எடுக்க கூட்டம் சேர்ந்தது. ஆனால் காலையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டம் நடந்திருக்கிறது. அதனால் பாகிஸ்தான் மீது ஏதாவது துல்லிய தாக்குதல் நடவடிக்கையை நமது ராணுவம் மேற்கொண்டதோ என்றுகூட மக்கள் சந்தேகப்பட்டனர்.

சரியாக 12.25 மணிக்குத்தான் பிரதமர் உரையாற்றத் தொடங்கினார். அப்போது அவர் முழுக்க முழுக்க இந்தியாவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஏ–சாட் என்ற செயற்கைகோள் அழிப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்திய விண்வெளி தொழில் நுட்பத்தில் இது மிகப்பெரிய சாதனையாகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) ‘மி‌ஷன் சக்தி’ என்ற பெயரில் இந்த சோதனையை நடத்தியுள்ளது. பூமியின் உள்வட்ட சுற்றுப்பாதையில் 300 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் செயல்பாட்டில் இருந்த செயற்கைகோளை இந்த ஏவுகணையை செலுத்தி நமது விஞ்ஞானிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதில் மிகவும் பெருமைக்குரியது என்னவென்றால், ‘மி‌ஷன் சக்தி’ என்ற இந்த திட்டம் மிகவும் சிக்கலானது. புவிவட்ட பாதையில் குறைந்தபட்ச தூரத்தில் சுற்றிவரும் செயற்கைகோளை சுட்டு வீழ்த்துவது என்பது அரிய சாதனையாகும். 3 நிமிடங்களில் சரியாக குறிபார்த்து இந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியதன் காரணமாக நம் நாட்டு விஞ்ஞானிகளின் திறமை பறைசாற்றப்பட்டுள்ளது. செயற்கைகோள்களை அழிக்கும் வல்லமை படைத்த அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில், இப்போது நான்காவதாக இந்தியாவும் இணைந்து இருக்கிறது என்று பெருமைபட கூறினார். ராணுவ ரகசியம் என்பதுபோல, இந்த முயற்சிகள் மிக ரகசியமாகவே நடந்துள்ளன.

நிச்சயமாக இது இந்தியாவுக்கு பெருமை. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையாகும். இந்த அளப்பரிய சாதனையை புரிந்துள்ள நம் நாட்டு விஞ்ஞானிகளின் திறமை போற்றுதலுக்குரியது. நமது நாட்டை உளவுபார்க்க எந்த நாடும் செயற்கைகோளை அனுப்பிவிடுமோ? என்ற அச்சம் யாருக்கும் இனி தேவையில்லை. இதுபோன்ற சோதனையை சீனா பல ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியது. ஆனால், அது தூரத்தில் உள்ள செயற்கை கோளை அழித்ததால் விண்வெளி குப்பைகள் புவிவட்ட பாதையிலேயே சுற்றி வருகின்றன. ஆனால், இப்போது இந்தியா நடத்திய சோதனை 300 கி.மீட்டர் தூரத்துக் குள்ளேயே நடத்தப்பட்டுள்ளதால் விண்வெளி குப்பைகள் மக்கி 45 நாட்களுக்குள் பூமியில் வந்து விழுந்துவிடும். எனவே, இந்தியா சோதனையால் அந்த அச்சமும் தேவையில்லை. இனி ராணுவ செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது விண்வெளியில் 320 ராணுவ செயற்கைகோள்கள் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதில் அமெரிக்காவுக்கு சொந்தமான 140 செயற்கை கோள்களும், ரஷியாவுக்கு சொந்தமான 80 செயற்கை கோள்களும், சீனாவுக்கு சொந்தமான 35 செயற்கை கோள்களும் அடங்கும். இந்தியாவுக்கு ஜி-சாட்-7, ஜி–சாட்-7ஏ என்ற கடற்படை மற்றும் விமானப்படை பயன்பாட்டுக்கான செயற்கைகோள்கள்தான் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆக, இனிமேல் நாட்டின் பாதுகாப்புக்காக என்ற வகையில் முப்படைகளுக்கான செயற்கைகோள்களையும் அதிகளவில் விண்வெளியில் செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யவேண்டும். 

Next Story