மக்களை கவருமா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை


மக்களை கவருமா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 5 April 2019 4:00 AM IST (Updated: 4 April 2019 7:44 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 11–ந்தேதி தொடங்கி மே 19–ந் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காங்கிரஸ் சாதிக்கும் என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இதுதவிர ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் உள்பட பல்வேறு பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளையும் பெற்று இந்ததேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. 

இணையதளம், வாட்ஸ்–அப், இ–மெயில், ஆன்–லைன் விண்ணப்பங்கள் மற்றும் கலந்தாய்வு கூட்டங்கள் மூலமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை பொதுமக்கள் என்ன கேட்கிறார்கள், குறிப்பாக விவசாயிகள், தொழில் அதிபர்கள், பொருளாதார வல்லுனர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற பலரிடம் கருத்து கேட்கப்பட்டதாக ராகுல்காந்தி தெரிவிக்கிறார். இந்தத்தேர்தல் அறிக்கை 55 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி, எல்லோருக்காகவும் சேவைபுரியும் பொருளாதாரம், நமது கடின சக்தி மூலம் கிடைக்கும் பெருமை, சிறந்த நிர்வாகம், நலிந்தோருக்கு சுயமதிப்பு, எல்லோருக்கும் கவுரவமான வாழ்க்கை என்ற அடிப்படைகளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், வேலைவாய்ப்புக்கு அதிகமுக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தொழில்சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் என்று ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். மத்திய அரசு, மத்திய பொதுநிறுவனங்கள், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றத்திலுள்ள 4 லட்சம் காலி இடங்கள் 2020–ம் ஆண்டு மார்ச் 1–ந்தேதிக்குள் நிரப்பப்படும். மாநில அரசுகளிடமும் அந்தந்த மாநிலங்களிலுள்ள மொத்தம் 20 லட்சம் பணியிடங்களை நிரப்ப கேட்டுக் கொள்ளப்படும். நாடுமுழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10 லட்சம் ‘சேவாமித்ரா’ என்ற பணியிடங்கள் உருவாக்கப்படும். அரசு தேர்வுகள் மற்றும் அரசு பதவிகளுக்காக விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும், 20 சதவீதம் ஏழைகுடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். பெண்களுக்கு மத்திய அரசாங்க பணிகள் உள்பட நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட்தேர்வு ரத்துசெய்யப்படும். விவசாயத்திற்கென தனிபட்ஜெட் உருவாக்கப்படும். பயிர்கடன்களை திரும்பகட்ட தவறினால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாமல், சிவில் சட்டங்களின் கீழ் நடவடிக்கை, 100 நாள் வேலைதிட்டத்தில் பணிநாட்கள் 150 நாட்களாக ஆக்கப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகள் மழைபோல பொழிந்துள்ளன. மேலும் மிகவும் முக்கியமான ஒரு வாக்குறுதியாக இப்போது 4 விகிதங்களில் இருக்கும் சரக்கு சேவைவரிக்கு பதிலாக, அனைத்து பொருட்களுக்கும், சேவைகளுக்கும் ஒரேவரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கு எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற முடியுமா?, பொருளாதார ரீதியாக சாத்தியம் இருக்கிறதா? அல்லது காற்றிலே கலந்த கீதமாக போய்விடுமா? என்று விமர்சனங்கள் எழுகின்றன. இது மக்களை கவருமா? என்பதும், சரக்கு நல்ல சரக்குதான் ஆனால் விலைபோகுமா? என்பதும் மே 23–ந்தேதி தேர்தல் முடிவு வெளிவரும் போதுதான் தெரியும்.

Next Story