செயற்கை மழை - சிறந்த யோசனை


செயற்கை மழை - சிறந்த யோசனை
x
தினத்தந்தி 5 April 2019 10:30 PM GMT (Updated: 5 April 2019 1:56 PM GMT)

தமிழ்நாட்டில் தேர்தல் சூறாவளியால், இப்போது நிலவும் கடுமையான வறட்சி யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

ஏரிகள், குளங்கள், கிணறுகள் எல்லாமே வற்றிப்போய் பாலைவனமாக காட்சியளிக்கிறது. மக்கள் குடங்களை கையிலும், தலையிலும் சுமந்து கொண்டு பல கிராமப்பகுதிகளில் வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே இறங்கி விட்டது. பருவமழை எல்லாம் பொய்த்துவிட்ட நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த மாதம் 7–ந்தேதி வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையில், 

24 மாவட்டங்களும், மீதமுள்ள 7 மாவட்டங்களில் 38 பஞ்சாயத்து யூனியன்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதால், வழக்கமாக திறக்கும் தண்ணீர் பந்தலைக்கூட திறப்பதற்கு தேர்தல் விதிகள் அனுமதிக்கவில்லை. மக்களுடைய எதிர்பார்ப்பெல்லாம் தேர்தல் ஒருபக்கம் நடக்கட்டும். வறட்சி நிவாரண பணிகளை கவனிப்பதில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பெற்று போர்க்கால அடிப்படையில் கவனிக்க வேண்டும் என்பதுதான். 1975–ம் ஆண்டு இதுபோல, தமிழ்நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் இருந்து செயற்கை மழையை பெய்விக்க ஒரு நிபுணர்குழு வரவழைக்கப்பட்டது. ராங்கனோ என்ற வானிலை நிபுணர் தலைமையில், பிரட்கிளார்க் என்ற என்ஜினீயரும், விவர்க்கா என்ற விமானியும் ஒருகுட்டி விமானத்தில் வந்தனர். அந்த விமானம் பூமியிலிருந்து 13 ஆயிரம் அடி உயரத்திற்குமேல் பறந்து மேகக்கூட்டங்கள் இடையே பறக்கும்போது விமானத்தின் இறக்கைகளுக்கு கீழே பொருத்தப்பட்டிருந்த மெழுகுவர்த்தி போன்ற அமைப்பில் உள்ள ‘சில்வர் அயோடைடு’ என்ற ரசாயனப்பொருளை எரிய வைத்து மேகங்களை குளிரச் செய்தார்கள். இதனால் நல்லமழையும் பெய்தது. அந்த செயற்கை மழையினால் பூண்டி ஏரியில் நல்லதண்ணீர் நிரம்பியது. 

இதேபோல செயற்கை மழைத்திட்டம் 1993–ம் ஆண்டு உள்பட ஒருசில நேரங்கள் நடத்தப்பட்டு மழையும் பெய்தது. இப்போது அதேபோல செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சிகளை, மத்திய–மாநில அரசுகள் ஏன் செய்யக்கூடாது?. கடலோர பகுதிகள் எல்லாம் கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்களை ஏன் தொடங்கக்கூடாது?. தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து இதுபோன்ற திட்டங்களை ஏன் நிறைவேற்றக்கூடாது? என்றெல்லாம் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் ஒரு வழக்கில் இதுபோல் கேள்விகளை கேட்டுள்ளார். சீனா ஆண்டுக்கு 5,500 டன் செயற்கை மழையை பெய்வித்துக்கொண்டிருக்கிறது. 

இதுபோல அமெரிக்கா 5 ஆயிரம் டன் செயற்கைமழை பெய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில்கூட இந்த சோதனை நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்போது செயற்கைமழை பெய்விக்கும் தொழில்நுட்பம் மிகவும் நவீனமாக வந்துவிட்டது. 8 ஆயிரம் அடி உயரத்திற்குமேல் உள்ள மேகங்களை குளிரவைத்து மழைபெய்ய வைக்கிறார்கள். தமிழக அரசும் உடனடியாக செயற்கைமழையை பெய்விக்கும் இந்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த வறட்சிகாலம் முழுவதும் ஆங்காங்கு நீர்நிலைகள் இருக்கும் இடங்களில் இந்தத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேநேரத்தில், வறண்டுபோய் இருக்கும் அனைத்து நீர்நிலைகளையும் ஆழப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அடுத்து மழைவரும்போது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கான அமைப்புகளை இப்போதே உருவாக்க வேண்டும். 

Next Story