வரி வசூலில் கசக்கி பிழியக்கூடாது


வரி வசூலில் கசக்கி பிழியக்கூடாது
x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-07T17:11:54+05:30)

‘‘வரி வசூல் என்பது, மலரிலிருந்து வண்டு தேன் சேகரிப்பது’’ போல, மென்மையான போக்கை கையாண்டு வரி கட்டுபவர்களுக்கு எந்தவித வலியும் இல்லாதவகையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

‘‘வரி வசூல் என்பது, மலரிலிருந்து வண்டு தேன் சேகரிப்பது’’ போல, மென்மையான போக்கை கையாண்டு வரி கட்டுபவர்களுக்கு எந்தவித வலியும் இல்லாதவகையில் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால், சமீபகாலங்களாக வருமானவரி வசூல் என்றாலும் சரி, சரக்கு சேவைவரி என்றாலும் சரி, வரி கட்டுபவர்களை கசக்கிப்பிழியும் நிலையில் இருக்கிறது. 2016–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திடீரென பிரதமர் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அப்போது அவர் பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம், உங்களிடம் உள்ள பணத்தை எல்லாம் தைரியமாக வங்கிகளிலோ, தபால் அலுவலகங்களிலோ கட்டிவிடுங்கள், உங்கள் பணம் உங்கள் பணமாகவே டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் என்று கூறினார். இதன்காரணமாக வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி பல அவசர செலவுகளுக்காக, திருமண செலவுகளுக்காக சேமித்துவைத்திருந்த பணத்தையெல்லாம் பொதுமக்கள், பிரதமரே சொல்லிவிட்டார் நமக்கென்ன பாதிப்பு இருக்கப்போகிறது, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமே என்று நினைத்து, தைரியமாக தங்கள் கைகளில் இருந்த பணத்தையெல்லாம் வங்கிகளில் செலுத்தினர். ஆனால், 3 லட்சம் பேருக்கும் அதிகமான பேர் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கட்டிவிட்டார்கள் என்ற வகையில், அவர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தைக்காட்டி, வருமானவரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் வருமானவரி கணக்கை தாக்கல்செய்து, ரூ.6,561 கோடி வரியாக கட்டிவிட்டார்கள். மீதமுள்ள 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகள், அவர்களிடம் மீண்டும் விவரத்தைப்பெற்று வரியைக் கட்டவைக்கவேண்டும் என்று தகவல் வந்திருக்கிறது. 

இந்த நிலையில், 2018–2019–ம் நிதி ஆண்டுக்காக வருமானவரி வசூல் ரூ.12 லட்சம் கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.10 லட்சத்து 95 ஆயிரம் கோடிதான் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தை எடுத்துக்கொண்டாலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட வெகுகுறைவாக ஏறத்தாழ ரூ.74 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வசூல் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் நீனாகுமார், அனைத்து முதன்மை தலைமை வருமானவரி ஆணையர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், வருவாயை பெருக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பாக, நிலுவையில் உள்ள தொகைகள், இப்போது வசூலிக்கவேண்டிய தொகைகளை அவசரமாக வசூலிக்க நடவடிக்கை எடுத்து இலக்கை அடையவேண்டும் என்று எழுதியிருந்தார். அவ்வளவுதான். உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அவர்கள் நோக்கம் வருவாயின் இலக்கை அடையவேண்டும் என்பதுதான். ஆனால், நடந்த கெடுபிடியான சோதனைகள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரசாங்கத்துக்கு வருவாய் குறைந்திருப்பது உண்மைதான். ஆனால் பொருளாதார வளர்ச்சி குறைந்து இருப்பது, விலைவாசி அதிகரிப்பு போன்ற பல காரணங்களால்தான் மக்களிடம் இருந்து வரி வசூல் குறைந்துள்ளது. ‘‘நட்சத்திரத்தை இலக்காக வைத்துக்கொள். அப்படியானால்தான் உங்களால் சந்திரனை அடையமுடியும்’’ என்பது பழமொழி. ஆனால் வருமான வரித்துறையை பொறுத்தமட்டில், ஆண்டுதோறும் உயர் இலக்கை நிர்ணயித்து, அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வகையில் வரி கட்டுவோரை கசக்கி பிழிவதுதான் ஏற்புடையதல்ல.

Next Story