தமிழரின் பெருமையை பறைசாற்ற வேண்டும்


தமிழரின் பெருமையை பறைசாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 8 April 2019 11:43 PM GMT (Updated: 8 April 2019 11:43 PM GMT)

‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு’, என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. பண்டைய காலந்தொட்டே தமிழன் நாகரிகத்தோடு வாழ்ந்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகார் தமிழர்கள் நகர நாகரிகத்தை உருவாக்கியிருந்தனர். உலகிலேயே நகர நாகரிகத்தை முதல்முதலாக உருவாக்கியது பூம்புகாரில்தான். பூம்புகார் நாகரிகத்தை தொடர்ந்து 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகம் உருவாவதற்கு முன்பே ஆதிச்சநல்லூரிலும் தமிழர்கள் ஒரு சிறப்பான நாகரிகத்தோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 18 கி.மீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஊர்தான் ஆதிச்சநல்லூர். அந்த காலங்களிலேயே 114 ஏக்கர் பரப்பளவில் இறந்தவர்களை தாழியில் புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஜாகர் என்பவர்தான். 1876-ம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பகுதியில் அவர் ஆய்வு நடத்தி பல பொருட்களை கண்டுபிடித்து அவர்கள் நாட்டுக்கே எடுத்துச் சென்றார். அந்த பொருட்கள் ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இன்றும் இருக்கிறது. இதுபோல, 1903-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் தாழிகளை தோண்டியெடுத்து மண்வெட்டி, கொழு போன்ற பொருட்களை கண்டுபிடித்தார். அதையும் அவர் பிரான்சுக்கு எடுத்துச் சென்றார். 1905-ம் ஆண்டு சென்னை அருங்காட்சியக கண்காணிப்பாளராக இருந்த அலெக்சாண்டர் ரீயா ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்த பல பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெற செய்தார். இப்படி தொடர்ந்து பலர் ஆராய்ச்சி செய்தனர். 2004-ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்து 2005-ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் ஆதிச்சநல்லூர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால், சரித்திரத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்றநிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அறிக்கை வெளியிடப்படவில்லை என்று ஒரு சந்தேகம் தமிழர்களிடம் இருக்கிறது. இந்தநிலையில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் பணிகள் தொடர்பாக மதுரையில் உள்ள ஐகோர்ட்டு கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (உதவி சொலிசிட்டர் ஜெனரல்) ஆஜராகி, ஆதிச்சநல்லூர் அகழிகளிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்காவில் உள்ள மியாமி சோதனைகூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் 2 பொருட்களின் பரிசோதனை முடிவுகள் வந்து விட்டன. அதன்படி, ஒருபொருள் கி.மு. 905-ம் ஆண்டையும், மற்றொரு பொருள் கி.மு. 791-ம் ஆண்டையும் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு. 395 ஆண்டுகள் பழமையானவை என்று தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக, ஆதிச்சநல்லூரில் தமிழர்களின் நாகரிகம் கி.மு. 905-ம் ஆண்டிற்கு முந்தையது என்பது உறுதியாகி விட்டது. இனி மீதமுள்ள பொருட்களின் கார்பன் சோதனையை கண்டுபிடிக்கவும், சத்தியமூர்த்தி அறிக்கையை வெளியிடவும், ஆதிச்சநல்லூர் போல கொற்கை, மாரமங்கலம், கழுகுமலை அருகே உள்ள பழங்கோட்டை, கரட்டுமலையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

Next Story