பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வாக்குகளை அள்ளுமா?


பா.ஜ.க.  தேர்தல்  அறிக்கை வாக்குகளை  அள்ளுமா?
x
தினத்தந்தி 9 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-09T18:51:35+05:30)

45 பக்கங்கள் கொண்ட ‘சங்கல்ப் பத்ரா’, அதாவது ‘உறுதிமொழி பத்திரம்’ என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

45 பக்கங்கள் கொண்ட ‘சங்கல்ப் பத்ரா’, அதாவது ‘உறுதிமொழி பத்திரம்’ என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்ததேர்தல் அறிக்கையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75–வது ஆண்டு விழாவை 2022–ம் ஆண்டு கொண்டாட இருக்கும் நிலையில், 75 வாக்குறுதிகள் கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் நடக்குமா?, பொருளாதார ரீதியாக சாத்தியக்கூறு இருக்கிறதா? என்றெல்லாம் சந்தேகப்படவேண்டிய நிலையில் இல்லாமல் நிச்சயம் நடக்கும், செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கும் விதமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு முழுமுக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை பொறுத்தமட்டில், ஏற்கனவே 5 ஏக்கர் நிலத்துக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுவிட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தத்திட்டம், அனைத்து விவசாயிகளுக்கும் செயல்படுத்தப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை கவரும். இதுமட்டுமல்லாமல், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பென்சன், வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கடன், வீடு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் வீடு, சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம், ஜி.எஸ்.டி. நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.100 லட்சம் கோடி மூலதன முதலீடாக 2024–ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகள் அனைத்து தரப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டவரைமுறைகளுக்கு ஏற்ப, அயோத்தியில் ராமர்கோவில் விரைவாக கட்டப்பட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவருவதில் பா.ஜ.க.வுக்கு உள்ள உறுதி, பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370–வது பிரிவு நீக்கம் என்பது உள்பட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்தல் அறிக்கையில் பெரிய குறை என்னவென்றால், வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் எந்தவிதமான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை என்பதுதான். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல வாக்குறுதிகள் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஒருசில வாக்குறுதிகளுக்கு நேர் எதிரான நிலைப்பாடு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் காணப்படுகிறது. நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு, கச்சத்தீவு மீட்பு, இந்திமொழி திணிப்பை உடனடியாக நிறுத்தவேண்டும், கேபிள் கட்டணம் குறைப்பு என்பது உள்பட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எதுவும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இல்லை. தமிழ்மொழி வளர்ச்சிக்கு கோரிக்கைகள் விடுத்துக்கொண்டிருந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் சமஸ்கிருதம் கற்றுக்கொடுப்பது பள்ளிக்கூட அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரபலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நிலையில், அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழக மக்களுக்கு நலன்பயக்கும் திட்டங்கள், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறாதது சற்று மனக்குறைவை அளிக்கிறது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையா?, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையா?. எது வாக்குகளை அள்ளித்தரப்போகிறது? என்பதற்கு விடை மே 23–ந்தேதி தெரியும்.

Next Story