பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம்
தலைவலி போய் திருகுவலி வந்தது என்று தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஒரு வழக்குமொழி உண்டு. ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில், தலைவலியும் போகவில்லை, திருகுவலியும் போகவில்லை.
தலைவலி போய் திருகுவலி வந்தது என்று தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஒரு வழக்குமொழி உண்டு. ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில், தலைவலியும் போகவில்லை, திருகுவலியும் போகவில்லை. ஒருபக்கம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டு அவர்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவச்செய்து பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொருபக்கம் ராணுவத்தின் அத்துமீறல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஒருபக்கம் நடக்கும்போது, பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் 15, 13 வயதுள்ள ரவீனா, ரீனா ஆகிய 2 சகோதரிகளை கடத்திச்சென்று கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்துவைத்த சம்பவம் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் முடிந்து உடனடியாக பதின் மாவட்டத்தில் மாலா குமாரி மேக்வார் என்ற 16 வயது பெண்ணையும் கடத்திச்சென்றிருக்கிறார்கள்.
ஹோலி பண்டிகையின்போது, விளையாடிக்கொண்டிருந்த ரவீனா, ரீனாவை செல்வாக்கு மிகுந்தவர்கள் கடத்திக்கொண்டு போனது மிகவும் அதிர்ச்சியை தந்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை அழைத்து, அவரை ஒரு அறிக்கை அனுப்பச்சொல்லி வெளிவிவகாரத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தானில் உள்ள தகவல் துறை மந்திரி பவத் சவுத்ரி டுவிட்டரில் ஒரு பதிலை அனுப்பியிருந்தார். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல மேடம், ‘இது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம், சிறுபான்மையினரை அடக்கி வைத்திருக்கும் மோடியின் இந்தியா அல்ல இது’ என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இது இம்ரான்கானின் புதிய பாகிஸ்தான், எங்கள் கொடியில் உள்ள வெள்ளை நிறம் எங்களுக்கு மிகவும் பிரியமானது. எனவே, இந்திய நாட்டு சிறுபான்மையினர் விஷயத்தில் நீங்களும் அதேபோன்ற அக்கறையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று பதில் அளித்தார். இந்த நிலையில், அந்த பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யவில்லை என்று பாகிஸ்தான் ஐகோர்ட்டு அறிவித்து இருக்கிறது.
பாகிஸ்தானில் 36 லட்சம் இந்துக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 82 சதவீதம் பேர் பண்ணைகளில் வேலைபார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களாவர். ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 25 இந்து பெண்கள் இதுபோல கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இவ்வளவுக்கும் சிந்து மாகாண சட்டசபையில் கடந்த 2018–ம் ஆண்டு நவம்பர் 24–ந்தேதி குற்றச்சட்டம் (சிறுபான்மையினரை பாதுகாத்தல்) நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அந்த சட்டப்படி, கட்டாய மதமாற்றம் செய்தால் 5 ஆண்டு முதல் அதிகபட்சம் ஆயுள்தண்டனை வரை விதிக்க வழிவகை இருக்கிறது. மேலும் 18 வயதுக்கு குறைந்தவர்களை மதமாற்றம் செய்வது இந்த சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய மதமாற்றம் செல்லாது என்றும், இந்த சட்டம் தெள்ளத்தெளிவாக சொல்கிறது. இப்படி ஒரு சட்டம் இருந்தும், கட்டாய மதமாற்றம் தொடர்கதையாக இருக்கிறது. எனவே, பாகிஸ்தானையே பூர்வீகமாகக்கொண்டு அதுதான் தங்கள் நாடு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பாகிஸ்தானியர்களே. மதம் மட்டும்தான் வெவ்வேறே தவிர, அவர்களும் பாகிஸ்தானியர்கள்தான். அந்தவகையில் பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம், அதிலும் குறிப்பாக 18 வயதுக்கு குறைந்த பெண்களை மதமாற்றம் செய்து கட்டாய திருமணம் செய்வதை தடுப்பதற்கு சிந்து மாகாணத்தில் இப்போது இருக்கும் சட்டத்தையே தீவிரமாக நிறைவேற்றவேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை, இந்தியா வலியுறுத்த வேண்டும்.
Related Tags :
Next Story