வாக்காளர்கள் எதிர்பார்ப்பது என்ன?


வாக்காளர்கள் எதிர்பார்ப்பது என்ன?
x
தினத்தந்தி 16 April 2019 10:00 PM GMT (Updated: 16 April 2019 3:59 PM GMT)

ஜனநாயக சீரமைப்பு சங்கம் (ஏ.டி.ஆர்) என்ற ஒரு அமைப்பு இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் தொடர்பான ஆய்வுகளை செய்துவருகிறது.

தமிழ்நாட்டிலும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கருத்துக்கேட்பு நடந்துள்ளது. இந்த கருத்துக்கேட்பு ஒரு வித்தியாசமானது. எந்தக்கட்சி தேர்தலில் வெற்றிபெறும்?, எந்தக்கட்சி அதிக சதவீதத்தில் வெற்றிபெறும்?, ஒவ்வொரு கட்சியின் பலன் என்ன? என்றெல்லாம் இந்த கருத்துக்கேட்பில் ஆய்வு நடக்கவில்லை. அரசிடமிருந்து வாக்காளர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?, அரசின் செயல்பாடுகளை வாக்காளர்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள்? என்பதைதான் இந்த ஆய்வு மேற்கொண்டது. இதில் முக்கிய கண்டுபிடிப்புகள் இந்த கருத்துக்கேட்பின் அறிக்கையில் வெளிவந்துள்ளது.

மக்கள் இலவசங்களையோ, மானியங்களையோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் நல்ல வேலைவாய்ப்பு, அதிக அளவில் தரமான மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடிநீர் ஆகியவைதான். கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால், மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பது, விவசாயத்திற்கு கடன் கிடைப்பது, விதை, உரங்களுக்கான மானியம் கிடைப்பது என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் இதில் அரசின் செயல்பாடு சராசரிக்கு கீழ் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப்புற வாக்காளர்களை தனியாக கருத்துக்கேட்டதில், வேலைவாய்ப்புகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள் ஆகிய பிரச்சினைகள்தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளனர். தேர்தலை பொறுத்தமட்டில், 48 சதவீத மக்களுக்கு வேட்பாளரின் கட்சிதான் முக்கியம் என்றும், 26 சதவீத மக்களுக்கு அதுதான் மிகமிக முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 சதவீத மக்கள் வேட்பாளர்தான் மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்கள். 18 சதவீத வாக்காளர்கள் பணம், மது, பரிசுகள் வினியோகம், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுபோடுவதற்கு முக்கியம் என்று கூறியுள்ளனர்.

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிப்பதில் தமிழ்நாட்டில் உள்ள 84 சதவீத வாக்காளர்கள் அவர்களது சொந்தக்கருத்து மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளனர். குற்றவியல் பின்னணி உள்ளவர்கள், நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ இருக்கக்கூடாது என்று 98 சதவீத வாக்காளர்கள் கருதுகிறார்கள். ஆனால், 37 சதவீத வாக்காளர்கள் குற்றவியல் பின்னணி இருக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதற்கு காரணம், அவர்கள் மற்றபடி நன்றாக செயல்படுகிறார்கள் என்று கருதுவதால்தான். இந்த ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால் மக்கள் வேலைவாய்ப்புகள், மருத்துவவசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்திடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல கிராமப்புற வாக்காளர்களை எடுத்துக்கொண்டால், விவசாயத்திற்கு தேவையான உதவிகளில்தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. மொத்தத்தில், மக்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது. இலவசங்கள், மானியங்கள் எல்லாம் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்களே தவிர, அதில் எந்த தாக்கமும் ஏற்படுவதற்கு வழியே இல்லை. அவர்களின் எதிர்பார்ப்பும் இதுவல்ல. தேர்தல் தொடர்பான இந்த ஆய்வறிக்கையில் மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டார்கள். இந்த தேர்தல் பரபரப்பெல்லாம் முடிந்தவுடன், மத்திய–மாநில அரசுகள் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை அவர்களும், தங்கள் அமைப்புகள் மூலம் ஆய்வு செய்து தெரிந்துகொண்டு அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபடவேண்டும்.

Next Story