மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியா?


மோடியை  எதிர்த்து பிரியங்கா  காந்தியா?
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-21T22:53:57+05:30)

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தை சாதுர்யம் என்பது அளப்பரியது. பூடகமாக பேசுவதில் வல்லவர்.

றைந்த முன்னாள் முதல்–அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தை சாதுர்யம் என்பது அளப்பரியது. பூடகமாக பேசுவதில் வல்லவர். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் ‘தினத்தந்தி’ செய்தியாளர், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்று கேட்டார். அதற்கு அவர், உண்டு என்றும் சொல்வதற்கில்லை. இல்லை என்றும் சொல்வதற்கில்லை என்று பதில் அளித்தார். உடனே மற்றொரு நிருபர், என்ன இப்படி சொல்கிறீர்கள். ஒரே சஸ்பென்சாக இருக்கிறது என்று கேட்டார். உடனே கருணாநிதி, வாழ்க்கையே சஸ்பென்ஸ்தானே என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதே பதிலைத்தான் இப்போது ராகுல்காந்தியும், நிருபர்களிடம் கூறியிருக்கிறார். ஒரு பேட்டியில் அவரிடம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட நிறுத்தப்படுவாரா? என்று கேட்டதற்கு, நான் இதை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இதை உங்களிடம் சஸ்பென்சாக விட்டுவிடுகிறேன் என்று பதில் அளித்தார். சஸ்பென்ஸ் எப்போதுமே மோசமானதல்ல என்று பதில் அளித்திருக்கிறார். வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் இந்த மாதம் 29–ந்தேதி ஆகும். 

காங்கிரஸ் கட்சி இதுவரையில் தன் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ராகுல்காந்தியின் பாசமுள்ள தங்கை பிரியங்கா காந்திக்கு 47 வயதாகிறது. புத்தமத படிப்பில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். ரேபரேலி தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்டபோது அதில் மட்டும் அவர் தலையிடுவாரே தவிர, மற்றபடி அவர் தீவிர அரசியலில் நுழையவில்லை. அந்த தொகுதிகளில் எல்லாம் அவர் மிகவும் பிரபலமானவர். கடந்த ஜனவரி மாதம் 23–ந்தேதி அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்படுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் அவர் ஏதாவது பொறுப்பை ஏற்கவேண்டும். தேர்தலில் போட்டியிடவேண்டும். கட்சியில் முக்கிய பங்காற்றிடவேண்டும் என்ற பெரிய வேண்டுகோள் காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்தது. 

ஆனால், தமிழ்நாட்டில் சொல்கிற பழமொழிபடி, பிரியங்கா காந்தி இதுவரை கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகத்தான் இருந்தார். ஆனால், ராகுல்காந்தி இந்த சஸ்பென்ஸ் கருத்தை வெளியிடுவதற்கு ஒருநாளுக்கு முன்பு, பிரியங்கா காந்தியின் கணவர் வதோரா, பிரியங்கா ஒரு கடுமையான உழைப்பாளி, கோவில் நகரமாம் வாரணாசியில் மோடிக்கு சவாலாக விளங்குவார் என்று கூறியதும், பல நாட்களுக்கு முன்பு நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒரு தொண்டர் திரும்ப திரும்ப பிரியங்கா காந்தியிடம், நீங்கள் ரேபரேலி தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று வலியுறுத்திய நேரத்தில், வாரணாசியில் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்று திருப்பி கேட்டதுடன், அவர் கலந்துகொள்ளும் பிரசார கூட்டங்களில் எல்லாம் வாரணாசியை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்துவிட்டார் என்று பேசுவதும், இந்த சஸ்பென்சுக்கு மேலும் வலுவூட்டுவதாக இருக்கிறது. இப்படி வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவாரா?, மாட்டாரா? என்பது குறித்த சஸ்பென்ஸ் காங்கிரஸ் கட்சியால் அடுத்த ஒருவாரத்தில் உடைக்கப்பட்டே தீரவேண்டும். அரசியல் அரங்கில் இப்போது இந்த சஸ்பென்ஸ்தான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. நரேந்திரமோடியை எதிர்த்து போட்டியிடுவது என்பது ஜெயித்தாலும், தோற்றாலும் நிச்சயம் நாடு முழுவதும் எல்லோராலும் பேசப்படுவதாக இருக்கும்.

Next Story