இந்தியா கவனமாக இருக்க வேண்டும்


இந்தியா கவனமாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 22 April 2019 6:52 PM GMT)

இலங்கையில் ஈவுஇரக்கமின்றி நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், உலகமெங்கும் உள்ளவர்களின் இதயங்களை சுக்குநூறாக்கிவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை மகிழ்ச்சி திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினார்கள். அந்தவகையில், தமிழ்நாட்டின் கூப்பிடும் தூரத்திலுள்ள இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. கொழும்பில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பிலுள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், தமிழர் பகுதியான மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம் ஆகிய இடங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததால் இந்த தேவாலயங்கள் பெரும் சேதமடைந்ததோடு, சிறு குழந்தைகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் உடல் சிதைந்து சின்னாபின்னமாக சிதறி உயிர் இழந்திருக்கிறார்கள்.

3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மட்டுமல்லாமல், கொழும்பில் உள்ள ஷாங்கரில்லா நட்சத்திர ஓட்டல், கிங்க்ஸ் பெரி நட்சத்திர ஓட்டல், சின்னமான் கிராண்ட் நட்சத்திர ஓட்டல் ஆகிய ஓட்டல்களிலும், மிருககாட்சி சாலை அருகிலும் குண்டுவெடித்தது. இதுமட்டுமல்லாமல், இந்த சம்பவத்தையொட்டி, ஒரு வீட்டை போலீசார் சோதனையிட சென்றபோது அந்த வீட்டில் உள்ள ஒருவன் தன் உடலில் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்ததினால் 3 போலீஸ்காரர்களும் உயிர் இழந்துள்ளனர். இந்த சம்பவங்களில் ஏறத்தாழ 300 பேர் உயிர் இழந்துள்ளனர். 500 பேருக்குமேல் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவங்களில் 6 இந்தியர்கள் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இது நிச்சயமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு விபத்துகளாகும். 3 சம்பவங்களில் மனித வெடிகுண்டுகள்தான் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று யூகிக்கமுடிகிறது. 10 நாட்களுக்கு முன்பே இலங்கை போலீஸ் தலைவர் புஜூத் ஜெயசுந்தரா, உயர் அதிகாரிகளுக்கெல்லாம் தற்கொலைப்படையினர் பெரிய தேவாலயங்களை தாக்க திட்டமிட்டுள்ளனர். வெளிநாட்டு உளவுப்பிரிவினர் கொடுத்த தகவலின்படி, ஒரு குறிப்பிட்ட அமைப்பு பிரபலமான கோவில்கள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை தாக்க திட்டமிட்டுள்ளனர் என்று எச்சரித்திருக்கிறார். இந்திய உளவுத்துறையும் மிக விளக்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. உளவுப்பிரிவு தகவலை வழக்கமான ஒன்று என்று அரசாங்கங்களும், போலீசாரும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

இந்திய தூதரகத்தின் மீதும் மனிதவெடிகுண்டு தாக்குதல் இருக்கக்கூடும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மட்டுமல்லாமல், இந்தியாவும் குறிப்பாக தமிழ்நாடு கவனமாக இருக்கவேண்டும். மக்கள் அதிகம்கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்படவேண்டும். உளவுப்பிரிவு தன்பணியை முடுக்கிவிடவேண்டும். உளவுப்பிரிவு தகவல்கள் மீது தீவிர நடவடிக்கைகள் விழிப்புடன் எடுக்கப்படவேண்டும். மேலும் மதத்தின்மீது வைத்த அன்பு பக்தியானது என்ற பாடலுக்கேற்ப, மதத்தின்மீது அன்பு வைக்கவேண்டும். அதுவே வெறியாகிவிடக்கூடாது. மதம் என்பது மக்களின் வாழ்க்கை முறைதான். அனைத்து சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்பதுபோல, அனைத்து மதங்களும் போகும் இடம் அன்பை நோக்கித்தான். நமது மதம்தான் உயர்ந்தது என்ற எண்ணம் இல்லாமல், மாற்று மதமும் மதிக்கப்படத்தக்கவை. எந்த மதமும் குறைந்தவை அல்ல என்ற உணர்வு உலகம் முழுவதும் தழைத்தோங்கவேண்டும். அண்ணா மேற்கோள் காட்டிய ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற தத்துவம் எல்லா இடங்களிலும் மதத்தலைவர்களால் பரப்பப்பட்டால் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமே இல்லை.

Next Story