தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்ரோல் விலை உயராதா?


தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்ரோல் விலை உயராதா?
x
தினத்தந்தி 23 April 2019 10:00 PM GMT (Updated: 2019-04-24T01:46:08+05:30)

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக பாதிக்கப்படுவதற்கு 2 முக்கியமான காரணங்கள் உண்டு. ஒன்று டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டு மதிப்பு குறைவு. அடுத்தது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைஉயர்வு. விலைவாசி உயர்வதற்கு இந்த 2 காரணங்களும் முக்கியபங்கு வகிக்கிறது.

பெட்ரோல்-டீசல் விலை உயரும்போதெல்லாம் விலைவாசி உயர்ந்து, பொருளாதார பாதிப்புகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. மொத்தத்தில், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட பணவீக்கம் கட்டுக்குள் இருக்கவேண்டும். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கவேண்டுமென்றால், விலைவாசி குறையவேண்டும். விலைவாசி குறையவேண்டுமென்றால், பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருக்கவேண்டும்.

2017-ம் ஆண்டு ஜூன் 16-ந்தேதிக்கு முன்புவரை மாதந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப 1-ந்தேதியும், 16-ந்தேதியும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. 16-6-2017-முதல் அன்றாடம் சர்வதேச கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப தினசரி விலை நிர்ணயம் நாடு முழுவதிலும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அந்தவகையில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல்-டீசல் விலை ஏற்ற இறக்கத்தை கண்டுவந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு நேற்று மாலையில் ஒரு பீப்பாய் விலை 74.14 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதுபோல, ரூபாயின் மதிப்பும் ஒரு டாலருக்கு ரூ.69.62 ஆக சரிந்துள்ளது. பங்குமார்க்கெட்டிலும் பெரும்சரிவு காணப்பட்டது. ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மற்றொரு பக்கம் ரூபாய்நோட்டு மதிப்பு குறைவு. இவையெல்லாம் சேர்த்து பெட்ரோல்-டீசல் விலையை அபரிமிதமாக உயர்த்திவிடுமோ என்று எல்லோரும் அச்சப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு தேர்தல் முடியும்வரை நிச்சயம் பெட்ரோல்-டீசல் விலை உயராது, இதைத்தானே கடந்த சில தேர்தல்களில் சந்தித்திருக்கிறோம் என்ற ஒரு மனத்தெம்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்குமேல் உயர்ந்தும், பெட்ரோல் விலை ஒருசதவீதத்திற்கு குறைவான உயர்விலேயே நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் சட்டசபை தேர்தலின்போதும், கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போதும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அந்த கணக்கையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால், இப்போதும் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், பெட்ரோல்-டீசல் விலை அந்த விலை உயர்வுக்கு ஏற்ப உயர்த்தப்படாமல்தான் இருக்கிறது. கடந்தமாதம் 15-ந்தேதி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.96 ஆக இருந்தது. நேற்று ரூ.70.17 ஆகத்தான் இருக்கிறது. இதுபோல, பெட்ரோல் விலை கடந்த 14-ந்தேதி 1 லிட்டருக்கு ரூ.75.62 ஆக இருந்தது, நேற்று ரூ.75.71 ஆகத்தான் இருந்தது. ஆக அடுத்தமாதம் 19-ந்தேதிவரை, நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், இந்தியாவில் அதற்கேற்ப பெட்ரோல்-டீசல் விலை உயராது. இது கண்ணாமூச்சி காட்டுவதுபோல இருக்கிறது. இப்போது மட்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாமல் இருப்பதுபோல, எப்போதும் இந்த விலையை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பொதுமக்களுக்கும் பாதிப்பு இருக்காது. விலைவாசியும் உயராது. அதற்கேற்ற வகையில், கலால்வரியை உயர்த்தியோ, குறைத்தோ இதை கட்டுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story