இந்த அறிவிப்புகள் வியாபாரிகளை கவருமா?


இந்த அறிவிப்புகள் வியாபாரிகளை கவருமா?
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-25T21:02:27+05:30)

பா.ஜ.க. அரசாங்கத்தில் ஒட்டுமொத்த பொதுமக்களை, குறிப்பாக வியாபாரிகளை பாதித்த 2 நடவடிக்கைகள் என்னவென்றால், அது பண மதிப்பிழப்பும், சரக்கு சேவை வரியும்தான்.

ஒரேநாளில் ரூ.1,000, ரூ.500 செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து, நாட்டில் பணப்புழக்கம் பெரிதும் குறைந்ததாலும், 2017–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்த சரக்கு சேவை வரியாலும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவ்வப்போது சரக்கு சேவைவரி கவுன்சில் நடத்திய கூட்டங்களை தொடர்ந்து, ஏற்பட்ட வரி மாற்றங்களாலும் வியாபாரிகள் குழப்பத்திற்கும் ஆளானார்கள். ஆக, இந்த 2 நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான வியாபாரிகள், அதிலும் சிறு வியாபாரிகளின் வியாபாரம் பெரும் சரிவைக்கண்டது. இப்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வியாபாரிகள் அனைவரும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளில், ‘‘தங்களுக்கு என்ன அறிவிப்பார்கள்?’’ என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘‘பா.ஜ.க. ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வரி பயங்கரவாதம் முடிவுக்கு வரும். தற்போதைய சரக்கு சேவை வரி சட்டம் மாற்றப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்படும். எல்லா சரக்குகள், சேவைகளுக்கும் ஒரே விகிதத்தில் வரிவிகிதம் கடைப்பிடிக்கப்படும்’’ என்பது உள்பட சில அறிவிப்புகள் கூறப்பட்டன. 

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், ‘‘சரக்கு சேவை வரி நடைமுறைகள் எளிதாக்கப்படும்’’ என்று கூறப்பட்டது. இந்த நிலையில், மொத்தம் 7 கட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், 3 கட்டங்கள் முடிவடைந்துவிட்டன. 2–வது கட்ட தேர்தல் நடந்த அன்று (18–ந் தேதி) டெல்லியில் நடந்த ஒரு வியாபாரிகள் மாநாட்டில், கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, வியாபாரிகள் பலன் அடையும் வகையில், அடுக்கடுக்காக நிறைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ‘‘தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடன், வியாபாரிகள் குறைகளை தீர்க்க தேசிய வியாபாரிகள் நலவாரியம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார். இதுபோல, ‘‘தேசிய சில்லரை வர்த்தக கொள்கை ஒன்றை உருவாக்கி, சில்லரை வியாபாரம் தழைக்க பாடுபடும். சரக்கு சேவை வரியோடு பதிவு செய்துள்ள வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு விபத்து காப்பீட்டு திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும். கிசான் கடன் அட்டைபோல, வியாபாரிகளுக்கு கடன் அட்டை திட்டம் கொண்டுவரப்படும். அடமானம் எதுவும் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். சிறிய விவசாயிகளுக்கு பென்‌ஷன் திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும்’’ என்பது போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ‘‘வியாபாரிகளின் கடின உழைப்பை நான் மதிக்கிறேன். அவர்களின் வியாபாரம், பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது’’ என்று பாராட்டியிருக்கிறார். 

ஒரு தேர்தல் அறிக்கையில் கூற வேண்டியவற்றை எல்லாம், பிரதமர் நரேந்திரமோடி 2–வது கட்ட தேர்தல் முடிந்த பிறகு திடீரென அறிவித்திருப்பது வியாபாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘இந்த அறிவிப்புகளை எல்லாம் முன்கூட்டியே அறிவித்திருக்கலாமே? என்று கருதுகிறார்கள். சரக்கு சேவை வரியாலும், பண மதிப்பிழப்பாலும் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வியாபாரிகளின் பாதிப்பை இந்த அறிவிப்புகளெல்லாம் போக்குமா?, இந்த அறிவிப்புகள் எல்லாம் வியாபாரிகளை கவருமா?’’ என்பதெல்லாம், அடுத்து நடக்கப்போகும் 4 கட்ட தேர்தல்களின் முடிவுகளில்தான் எதிரொலிக்கும்.

Next Story