தத்தெடுப்பு விதிகளை தளர்த்தலாமே!


தத்தெடுப்பு விதிகளை தளர்த்தலாமே!
x
தினத்தந்தி 28 April 2019 10:30 PM GMT (Updated: 28 April 2019 12:16 PM GMT)

கடந்த வாரம் வியாழக்கிழமை தந்தி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட ஒரு ஆடியோ உரையாடல் தமிழ்நாடு முழுவதிலுமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது.

டந்த வாரம் வியாழக்கிழமை தந்தி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட ஒரு ஆடியோ உரையாடல் தமிழ்நாடு முழுவதிலுமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. குழந்தைகளை ஏதோ கத்தரிக்காய் விற்பதுபோல, சர்வ சாதாரணமாக விற்கும் கொடிய செயல் தமிழ்நாட்டில் அரங்கேறிக்கொண்டிருப்பதை அந்த உரையாடல் காட்டியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி அமுதவள்ளி என்ற விருப்ப ஓய்வுபெற்ற நர்சு, தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரோடு குழந்தை விற்பனை தொடர்பாக செல்போனில் பேசியிருக்கிறார். இந்த உரையாடலின்போது கறுப்பு பெண் குழந்தை என்றால் ரூ.2.75  லட்சம், ஆண் குழந்தை கலராக இருந்தால் ரூ.4.25 லட்சம், பெண் குழந்தை  அழகாக  இருந்தால்  ரூ.3 லட்சம் என்றும், ராசிபுரத்திலேயே பிரசவம் நடந்ததுபோல நகரசபையில் பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவேன் என்றும் அந்த உரையாடலில் கடையில் பொருள் விற்பதுபோல அமுதவள்ளி பேசியிருக்கிறார். 

இந்த ஆடியோ பேச்சு வெளியான பிறகு இந்த வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். விசாரணையில் கொல்லிமலை பகுதியில் ஏழ்மைநிலையில் உள்ள பெண்களுக்கு பிரசவம் பார்த்து, அவர்களின் வறுமையை பயன்படுத்தி அந்த குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக தெரிகிறது. பல குழந்தைகள் இதுபோல் விற்பனை செய்யப்பட்டு இருப்பதும், அதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருவதும் பெரிய பரபரப்பாக இருக்கிறது. இப்படி சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை ராசிபுரத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் எங்கெங்கு நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிக்க ஒரு விசாரணை நடத்தவேண்டும். ஆனால் குழந்தை இல்லாதவர்கள் இவ்வாறு சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கும் நேரத்தில், எதிர்காலத்தில் நிறைய சட்டசிக்கல்களை சந்திக்கவேண்டும். இப்போது குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்றால் அதற்காக முறையாக பதிவு செய்து இதுபோன்ற பெற்றோரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, அனாதை குழந்தைகள் வளர்க்கும் இல்லங்களில் இருந்தே பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் இருக்கிறது. 

இப்போதெல்லாம் குழந்தை இல்லாமல் தத்தெடுக்க விரும்புபவர்கள், மத்திய தத்தெடுத்தல் ஆதார ஆணையம் (காரா) என்ற அமைப்பின் இணையதள முகவரியான   நீணீக்ஷீணீ.ஸீவீநீ.வீஸீ   என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அப்போது பதிவு செய்து கொள்ளும்போதே அவரது வீட்டு முகவரியை குறிப்பிட வேண்டும். பின்னர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அரசு தத்து மையம் வீட்டுக்கு வந்து ஆய்வுசெய்து ஒரு அறிக்கை தாக்கல் செய்வார்கள். இந்த விண்ணப்பத்தில் 3 மாநிலங்களில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க அவர்களுக்கு வாய்ப்பு உண்டு. அதன்பிறகு தொடர்ந்து நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. கடைசி நடைமுறையாக தத்தெடுத்த குழந்தையுடன் நீதிமன்றத்துக்கு செல்லவேண்டும். நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த பிறகுதான் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த முறையை பின்பற்றி தத்தெடுத்தால் சட்டப்பூர்வமாக அந்த குழந்தை அவர்கள் குழந்தையாகவே ஆகிவிடும். குழந்தைகளுக்கும் ஒரு சொந்த குழந்தைபோல அனைத்து உரிமைகளும் கிடைக்கும். இது நிச்சயமாக வரவேற்கத்தக்கக் கூடிய ஒரு நடவடிக்கைதான். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள சாதாரண பாமர மக்களுக்கு இது எளிதான நடவடிக்கை அல்ல. எனவே குழந்தை தத்தெடுப்பு முறைக்கு உள்ள நடைமுறைகளை இன்னும்  எளிதாக்கி  இப்போதுபோல,  2  ஆண்டுகள்,  3 ஆண்டுகள் காத்திருக்காமல் உடனடியாக குழந்தை கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Next Story