அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லையா?


அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லையா?
x
தினத்தந்தி 29 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-29T22:34:38+05:30)

கடந்த சில நாட்களாகவே பல அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு நோய்க்கு தேவையான இன்சுலின் இல்லை. ஏன் வலி நிவாரணியான பாராசிட்டமால்கூட இல்லை.

சிறுநீரக கோளாறுக்கான மருந்து இல்லை. ஆன்டிபயாடிக்குகள் இல்லை. குளுக்கோஸ் மருந்து போன்ற பல மருந்துகள் கிடைக்காத நிலை இருக்கிறது. டாக்டர்கள் சிலநேரங்களில் ஏதாவது மாற்று மருந்துகள் கொடுக்கிறார்கள். சிலநேரங்களில் வெளியே போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தனியார் மருத்துவர்கள் மருந்துசீட்டு எழுதி கொடுப்பதுபோல, சீட்டு எழுதிக் கொடுக்கும் நிலையும் இருக்கிறது. இதுபோன்ற நிலை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்துக்கு கடந்த பிப்ரவரி மாதமே ஏற்பட்டு விட்டது என்கிறார்கள்.

12 மருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்ட நேரத்தில் யாருமே விண்ணப்பம் செய்ய முன்வரவில்லை. இதற்கு காரணம் மருந்து உற்பத்தியாளர்களுக்கு இத்தகைய மருந்துகளை உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் சீனாவில் இருந்து வரவேண்டும். அது இன்னும் கிடைக்கவில்லை. அதனால்தான் டெண்டரில் கலந்து கொள்ள முடியவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். உற்பத்தியாளர்கள் கூறுவது சரியான காரணம்தான். நாடு முழுவதும் இந்தநிலை இருக்கிறது. எனவே இப்போது மறுடெண்டர் விடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மருந்து தட்டுப்பாடு உள்ள மருத்துவமனைகள் உடனடியாக உள்ளூர் கடைகளில் இந்த மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் உள்ள 21 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், 29 மாவட்ட மருத்துவமனைகள் உள்பட 303 தாலுகா மற்றும் அரசு மாவட்ட மருத்துவமனைகள், 1,764 ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கி மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த 23-ந்தேதி இந்த தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், அனைத்து மருத்துவ கல்லூரிகளின் டீன்கள் மருத்துவ சேவைத்துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. அதில் அரசு மருத்துவ பணிகள் கழக கிட்டங்கிகளிலோ, மருத்துவ நிலையங்களிலோ 33 வகையான மாத்திரைகள், ஊசி மருந்துகள், கண் சொட்டு மருந்துகள் போன்றவை கிடைக்காவிட்டால் உள்ளூரிலேயே தங்களின் 30 நாட்களின் தேவைக்கு, அதாவது 23-4-19 முதல் 22-5-19 வரையிலான அந்த மருந்துகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று ஒரு தடையில்லா சான்றிதழை அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 33 மருந்துகள், ஊசி மருந்துகளெல்லாம் மிகவும் தேவையான மருந்துகளாகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை நிச்சயமாக வரவேற்புக்குரியது. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பார்க்க வசதியில்லாத ஏழை-எளிய மக்களுக்கு, எந்தவித கட்டணமும் இல்லாமல் உயர் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதில் எந்தவித தட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்றவகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மிக சரியானதே. ஆனால் இது தற்காலிகமானதாகத்தான் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் 3 மாதம் கையிருப்பில் இருக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்கான சப்ளை பணிகள் நடந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது. மொத்தத்தில், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என்பது ஒருபோதும் இருக்காது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

Next Story