1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களை தவிர, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் 1,500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்தமாதம் முதல் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களை தவிர, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் 1,500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்தமாதம் முதல் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31–ந்தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கையை தமிழக கல்வித்துறை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2010–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்கீழ் தொடக்க மற்றும் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதி தேர்வுபெற்ற பிறகுதான் ‘செகண்டரி கிரேடு’ ஆசிரியர்களாக வேலைவாய்ப்பை பெறமுடியும். இதுபோல், பி.எட். பட்டப்படிப்பு படித்த ஆசிரியர்கள் அவர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பிறகுதான் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்த சட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும் இந்த மூலசட்டத்திற்கு ஏற்ற விதிகளை தனது அரசிதழில் வெளியிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கான விதிகள் 2011–ம் ஆண்டு நவம்பர் 15–ந்தேதி வெளியிடப்பட்டது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிகளில் அந்த தேதிக்குப்பிறகு நியமிக்கப்பட இருக்கும் ஆசிரியர்கள் நியமனம் என்பது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டுதான் நிரப்பப்படும் என்றும், 2011–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்றும், 2012–ம் ஆண்டு நவம்பர் 16–ந்தேதி அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த 5 ஆண்டு காலக்கெடு, மேலும் 2 ஆண்டுகள் என கடந்த மார்ச் 31–ந்தேதிவரை நீடிக்கப்பட்டது. ஆனால், இந்த காலக்கெடுவுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெறாத 1,500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இப்போது சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் 5 ஆண்டுகள் காலக்கெடு கொடுத்தோம். அதற்கும்மேல் 2 ஆண்டுகள் காலக்கெடு கொடுத்தோம். 7 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறாதவர்களுக்குத்தான் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறினாலும், ஆசிரியர்கள் தரப்பில் வேறுவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிமுறைகளின்படி, மாநில அரசு ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தவேண்டும். ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் 4 முறைதான் இந்தத்தேர்வை நடத்தியிருக்கிறது. மேலும் 2011–ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களிடம், நீங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆசிரியர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களில் தேறி டிப்ளமோ படித்திருக்கிறார்கள். பி.எட். பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்கு இன்னொரு ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற விமர்சனங்களும் எழுகின்றன. இருந்தாலும், இப்போதுள்ள சூழ்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தத்தவறிய கல்வித்துறை, ஏற்கனவே கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட 5 ஆண்டு காலக்கெடுவை கணக்கிட்டால், 5 முறை தேர்வை நடத்தியிருக்கவேண்டும். அந்தக்கணக்கில் இன்னும் ஒரு தேர்வை இறுதியாக நடத்தி, அதில் கண்டிப்பாக இந்த 1,500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் தேர்வு பெறவேண்டும். இல்லையெனில், நடவடிக்கை என்பதை உறுதியாக சொல்லிவிடலாம். எனவே, மேலும் ஒரு தவணை கொடுப்பதை மனிதாபிமான நடவடிக்கையாக தமிழக கல்வித்துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story