இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி


இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி
x
தினத்தந்தி 4 May 2019 4:00 AM IST (Updated: 3 May 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தொடர்ந்து பல பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிக்கொண்டு இருப்பவர், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவத்தின் முழு உதவியோடு ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெய்ஷ்–இ–முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார்.

ந்தியாவில் தொடர்ந்து பல பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிக்கொண்டு இருப்பவர், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவத்தின் முழு உதவியோடு ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெய்ஷ்–இ–முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவரை சர்வதேச பயங்கரவாதி யாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவிக்கவேண்டும் என்று 2009, 2016 மற்றும் 2017–ம் ஆண்டுகளில் இருந்து இந்தியா முயற்சி செய்துகொண்டு இருந்தது. பாகிஸ்தானின் நண்பரான சீனா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டதால், இந்தியாவின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இப்போது புல்வாமா தாக்குதலுக்குப்பிறகு, சர்வதேச நாடுகளின் பார்வையும் மாறிவிட்டதால் சீனா முட்டுக்கட்டை போடவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஏன் இந்தோனேஷியா போன்ற நாடுகளின் ஆதரவால் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். இதன் காரணமாக உலகில் உள்ள நாடுகளில் இருக்கும் மசூத் அசாரின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். அவரின் பயணங்கள் எல்லாம் தடுக்கப்படும். அவர் சார்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு ஆயுதங்கள் கிடைப்பது முற்றிலும் தடுக்கப்படும். இந்த முடிவு இந்தியாவின் தூதரக உறவுகளுக்கும், பயங்கரவாதத்தை எதிர்த்து எடுக்கும் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிச்சயமாக வெற்றியாகும். 

1994–ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மசூத் அசாரை இந்திய படைகள் கைதுசெய்து ஜெயிலில் அடைத்தது. ஆனால் 1999–ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தி, கந்தகார் விமானநிலையத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்த நேரத்தில், பணயக்கைதி களாக வைக்கப்பட்டிருந்த அப்பாவி பயணிகளை விடுவிக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தில் இந்தியாவில் சிறையில் இருந்த 3 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் இந்த மசூத் அசார். அந்த சம்பவத்தில் வெளியேவந்த மசூத் அசார் பாகிஸ்தானுக்கு சென்று அங்கு ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினார். 2000–ம் ஆண்டு முதல் இந்தியாவில் தீவிர தாக்குதல்கள் மேற்கொள்வதையே நோக்கமாக கொண்ட இந்த பயங்கரவாத இயக்கம் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் கொடிய செயல்களை நிகழ்த்திவிட்டு, நாங்கள்தான் அதைச்செய்தோம் என்று கொக்கரிப்பது வழக்கம். 

பாலக்கோட் இந்திய விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசார் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார். அவருக்கு 10 பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் முழு பாதுகாப்போடு உலாவந்து கொண்டிருக்கும் மசூத் அசார் பாலக்கோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலுக்குப்பிறகு பல இடங்களுக்கு ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டு, தற்போது ஷேகுபுரா என்ற இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். ஐ.நா. சபையில் இந்தியா இன்னும் அழுத்தத்தைக்கொடுத்து மசூத் அசாரை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளவேண்டும். இதுமட்டுமல்லாமல், காஷ்மீரிலும் ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்த 

60 முதல் 70 பேர் இருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் சொல்கிறது. இவர்கள் எல்லாம் தற்கொலைப் படை தாக்குதலுக்கு தயாராக இருப்பவர்கள். இவர்களையும் சேர்த்து, இவர்கள்போல காஷ்மீரில் லஷ்கர்–இ–தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அவர்களையும் பிடித்து இதுபோன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்ற நிலையை இந்திய ராணுவமும், துணை ராணுவ படைகளும் உருவாக்கவேண்டும். 

Next Story