பாராட்டப்பட வேண்டிய ஒடிசா அரசாங்கம்


பாராட்டப்பட வேண்டிய ஒடிசா அரசாங்கம்
x
தினத்தந்தி 5 May 2019 10:30 PM GMT (Updated: 5 May 2019 11:47 AM GMT)

ஒரு வாரத்துக்கு முன் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பெரும் புயலாகி மாறியது ‘பானி’ புயல்.

ரு வாரத்துக்கு முன் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பெரும் புயலாகி மாறியது ‘பானி’ புயல். வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஓரமுள்ள 8 நாடுகளான வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பெயர் சூட்டவேண்டும் என்ற முடிவு 2004–ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அந்தவகையில், இந்தமுறை தமிழ்நாட்டை தாக்குவதாக முதலில் பயம்காட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்ற பெயர் வங்காளதேசத்தால் சூட்டப்பட்டது. 

வங்காளமொழியில் ‘போனி’ என்றுதான் அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைக்கு ‘படம் எடுத்து ஆடும் பாம்பு’ என்று பெயர். அடுத்த புயல் இந்த பகுதியில் எங்கு தோன்றினாலும் அதற்கு இந்தியா சூட்டியுள்ள பெயர் ‘வாயு’. ‘வாயு’ புயலின்போது எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது ‘பானி’ புயல் பாடமாக காட்டிவிட்டது. ஒடிசாவில் 175 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழையையும் சேர்த்து கொண்டுவந்து முதலில் புண்ணிய தலமான பூரியை தாக்கியது. அதைத்தொடர்ந்து ‘பானி’ புயல் ஆடிய கோரத்தாண்டவத்தால் எண்ணற்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன. குடிசைகள் தரைமட்டமாகின. மின்கம்பங்கள் சாய்ந்தன. கட்டிடங்களுக்கு பலத்தசேதம் ஏற்பட்டது. ஏராளமான கிராமங்கள், நகரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. ஒடிசா மாநிலத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. இவ்வளவு இருந்தும் உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படாததற்கு காரணம், ஒடிசா மாநிலஅரசு, மத்தியஅரசு, மத்திய–மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். இப்படியொரு புயல் வரப்போகிறது என்பதை இஸ்ரோ சார்பில் விண்வெளி மண்டலத்தில் சுற்றி பறந்துகொண்டிருக்கும் 18 செயற்கைக்கோள்கள் துல்லியமாக கண்டுபிடித்து இந்தியாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. இதன்மூலம் இந்த புயல் எங்கு செல்கிறது?, எங்கு தாக்கப்போகிறது? என்பதை முன்கூட்டியே தெரிய முடிந்தது. இதுமட்டுமல்லாமல், கிழக்கு கடலோர பகுதிகளில் மிதக்க விடப்பட்டுள்ள 12 மிதவைகள் இந்த புயலின் வேகம் எங்கு நோக்கி நகர்கிறது? என்றெல்லாம் தெரிவித்துக்கொண்டிருந்தது. ஒடிசா அரசாங்கமும், 24 மணிநேரத்திற்குள் 12 லட்சம் மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தது. 

10 ஆயிரம் கிராமங்கள், 52 நகரங்களில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் புகலிடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது. 1999–ம் ஆண்டு ஒடிசாவில் இதுபோன்ற புயல் தாக்கிய நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். ஆனால், இப்போது ஏறத்தாழ 10 பேர்தான் உயிர் இழக்க வேண்டியநிலை ஏற்பட்டது. புயல் பற்றிய செய்தி கிடைத்தவுடனேயே, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின்பேரில், மத்திய அரசாங்கம் முன்கூட்டியே நிதி ஒதுக்கியது. எதிர்காலத்தில் எந்த மாநிலத்தில், எந்த பேரிடர் ஏற்பட்டாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நிச்சயமாக பெருமளவில் உயிர்ச்சேதத்தை தடுக்கமுடியும். அந்தவகையில், இனி இதுபோன்ற நிலை ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்பதற்கான பாடத்தை ‘பானி’ புயல் காட்டிவிட்டது. ஒடிசா மாநில முதல்–மந்திரி நவீன்பட்நாயக்கும், மத்திய–மாநில பேரிடர் மேலாண்மை குழுக்களும், இஸ்ரோ நிறுவனமும், இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையமும் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள்.

Next Story