இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையா?


இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையா?
x
தினத்தந்தி 6 May 2019 6:49 PM GMT (Updated: 2019-05-07T00:19:20+05:30)

நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்காக தேசிய தகுதிக்காண் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் நீட்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

 கடந்த 2 ஆண்டுகளாக நீட்தேர்வை மத்தியசெகண்டரி கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தியது. இந்த ஆண்டு தேசிய தேர்வுகள் முகமை இந்தத்தேர்வை நடத்தியது. அரசியல் ரீதியாக நீட்தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாட்டில் சொன்னாலும், இந்த ஆண்டு நீட்தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கையை பார்த்தால், அகில இந்தியாவிலேயே முதல் இடத்தில் மராட்டியமும், 2-வது இடத்தில் உத்தரபிரதேசமும், 3-வது இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. இந்தியா முழுவதும் நீட்தேர்வு எழுத 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 14 நகரங்களிலுள்ள 188 மையங்களில் 1,34,711 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட்தேர்வை எழுதியிருக்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் இந்தத்தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் மாணவர்கள் 3-வது ஆண்டாக இந்தத்தேர்வை எழுதினார்கள். கடந்த ஆண்டைப்போல் இல்லாமல், இந்தமுறை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பம் செய்த மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். நீட்தேர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணிவரை நடந்தது. ஆனால், 12 மணிக்கே மாணவர்கள் வந்துவிடவேண்டும் என்று கூறப்பட்டது. இந்தத்தேர்வு எழுத மையங்களுக்குள் அனுமதிக்கப்படும் முன்பு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மிகக்கடுமையான சோதனைகள் நடந்தன.

முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்களின் சட்டை அரை கையளவிற்கு வெட்டியபிறகுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலில் ஷூக்கள், ஹைஹீல் செருப்புகள் அணிய அனுமதியில்லை. மணிபர்ஸ், பெல்ட், கைக்கடிகாரம், செல்போன் என்று எதையுமே கொண்டுபோக அனுமதிக்கவில்லை. மாணவிகளை பொறுத்தமட்டில், கம்மல், மூக்குத்தி, கொலுசு, தலையில் மாட்டப்பட்டிருந்த கிளிப், ஹேர்பேண்ட், ரப்பர்பேண்ட் என எல்லாவற்றையும் கழட்டிக்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால், மாணவிகள் தலைவிரி கோலமாக சென்று தேர்வு எழுதும்நிலை ஏற்பட்டது. காதுகளுக்குள் டார்ச்லைட் அடித்தும் சோதனை நடத்தப்பட்டது. பல மாணவ-மாணவிகள் கைகளில் கட்டப்பட்டிருந்த மதரீதியிலான கயிறுகளும் அகற்றப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை மாணவிகள் அணிந்த துப்பட்டாவையும் கழற்றி வைத்துவிட்டு போக சொல்லிவிட்டார்கள்.

மாணவர்களோடு சேர்ந்து தேர்வுமையத்தில் உட்காரவேண்டிய பல மாணவிகள் துப்பட்டாவை கழற்ற சொல்லிவிட்டதால் கூனி குறுகி அவமானத்துடன் உள்ளே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், தெளிவான மனதுடனும் தேர்வு எழுத சென்றால்தான் அவர்களால் தேர்வில் முழுகவனமும் செலுத்தமுடியும். ஆனால், நீட்தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையற்ற கட்டுப்பாடுகளுடன் உள்ளே அனுப்பியதால் மனஅழுத்தத்துடனே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிவில் சர்வீசஸ் தேர்வு நடக்கிறது, பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கிறது, எத்தனையோ நுழைவுத்தேர்வுகள் நடக்கின்றன.

எங்கும் இல்லாத கட்டுப்பாடு நீட்தேர்வுக்கு மட்டும் ஏன் இப்படி தேவையில்லாமல் விதிக்கப்படுகிறது? என்பதுதான் மாணவர்களின் கேள்வி. இனிவரும் ஆண்டுகளிலாவது மாணவர்களுக்கு இவ்வளவு தேவையற்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், மற்ற தேர்வுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து தேர்வுஎழுத அனுமதிக்கவேண்டும்.

Next Story