தமிழ் மாணவர்களை மட்டும் சொல்வதா?


தமிழ் மாணவர்களை மட்டும் சொல்வதா?
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 7 May 2019 4:59 PM GMT)

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக இப்போது முழுவீச்சில் பிரசாரம் நடந்து வருகிறது.

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக இப்போது முழுவீச்சில் பிரசாரம் நடந்து வருகிறது. இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சித்தலைவரான டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டுள்ள பிரசாரம் குறித்து, டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சங்கம் தேர்தல் கமி‌ஷனில் ஒரு புகார் கொடுத்துள்ளது. அதில், அரவிந்த் கெஜ்ரிவால் மாணவர்களுக்கிடையே பிரிவினையை உருவாக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு அம்சமாக டெல்லிவாழ் மக்களுக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வருகிறது. அதை எடுத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதிவு செய்யப்பட்ட குரல் கேட்கிறது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘ஆண்டுதோறும் 500 தமிழ் மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிடுகிறார்கள். இதன்காரணமாக டெல்லி மக்களுக்கு வாய்ப்புகள் பறிபோகிறது’’ என்று கூறுகிறார். 

அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது, டெல்லியில் உள்ள கல்வி நிலையங்களில் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் அங்குள்ள மாநில கல்வித்திட்டத்தில் படித்து, பிளஸ்–2 தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று வருகிறார்கள். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு இங்குள்ள கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்துவிடுகிறது. டெல்லி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதுவதால், தமிழக மாணவர்களைப்போல மதிப்பெண்கள் எடுக்க முடிவதில்லை. டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் மொத்தம் உள்ள 150 இடங்களில், 140 இடங்களில் தமிழக மாணவர்கள் சேர்ந்துவிட்டார்கள். டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து கிடைத்தால் டெல்லியில் பிளஸ்–2 படிக்கும் மாணவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று பேசியிருக்கிறார்.

முதல்–மந்திரியின் இந்தப்பேச்சு டெல்லியில் வாழும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டெல்லியை பொறுத்தமட்டில், தமிழர்களுக்கும், டெல்லி மக்களுக்கும் இடையே காலங்காலமாக மிகவும் சுமுகமான முறையில் நல்லுறவே தழைத்து வருகிறது. டெல்லியில் தமிழ்சங்கம் இருக்கிறது. தில்லி தமிழ் கல்வி கழகம் 7 பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது. சில குறிப்பிட்ட இடங்களில் தமிழர்களே அதிகம் வசிக்கிறார்கள். டெல்லி என்பது நம் நாட்டின் தலைநகர். தமிழர்களுக்கும் இதுதான் தலைநகர். எனவே, தமிழர்கள் படிப்பதை அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி விமர்சனம் செய்வது வேற்றுமையில் ஒற்றுமை என்று வாழும் இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வழிவகுத்துவிடும். இதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்ட டெல்லி பல்கலைக்கழகம் மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகம் ஆகும். இதில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இதுபோல, மத்திய பல்கலைக்கழகங்களான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜே.எம்.ஜே. என்று கூறப்படும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா என்ற பல்கலைக்கழகங்கள் நுழைவுத்தேர்வின் அடிப்படையில்தான் மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். டெல்லியில் உள்ள தமிழ் மாணவர்கள் சங்க தலைவரான சட்டக்கல்லூரி மாணவர் சரவண ராகுல் இதுபற்றி கூறும்போது, டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் பாதிபேர் உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில், தமிழ் மாணவர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்வது தேவையற்ற இடையூறை ஏற்படுத்தும் என்று சொன்னதுதான் தமிழ் மக்களின் உணர்வாகும். எனவே, தமிழ் மாணவர்களை மட்டும் குறிவைத்து கெஜ்ரிவால் பேசியது ஏற்புடையது அல்ல.

Next Story