இனி கவர்னரின் முடிவே இறுதியானது


இனி கவர்னரின் முடிவே இறுதியானது
x
தினத்தந்தி 10 May 2019 10:15 PM GMT (Updated: 10 May 2019 2:32 PM GMT)

தமிழகம் ஆண்டாண்டு காலமாக ஒரு அமைதி பூங்காவாக திகழ்ந்து வந்தது. இவ்வாறு அமைதி மண்ணாக திகழ்ந்த தமிழ்நாட்டில் 1991–ம் ஆண்டு மே 21–ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மனித வெடிகுண்டை பயன்படுத்தி படுகொலை செய்யப்பட்டது, இந்த மண்ணை சிவந்த மண்ணாக்கிவிட்டது.

ராஜீவ்காந்தியோடு சுற்றி இருந்தவர் களையும் சேர்த்து 16 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். இப்படி எத்தனையோ பேருடைய வாழ்க்கை பறிபோன இந்த சம்பவத்தில், நீண்ட நெடிய நீதிபயணத்துக்குப்பிறகு பேரறிவாளன், ஸ்ரீதரன் என்ற முருகன், சுதந்திர ராஜா என்ற சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனை என்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இவர்களை, விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஓரிரு அரசியல் கட்சிகளைத்தவிர, பெரும்பாலான அரசியல் கட்சிகள் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். 

ராஜீவ்காந்தியின் மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா, ஏன் அவரது மனைவி சோனியாகாந்திகூட ராஜீவ்காந்தியை கொலைசெய்தவர்களை மன்னித்து விட்டோம் என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே இவர்களை விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று ராஜீவ்காந்தியின் கொலை சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் போடப் பட்டிருந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின்மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டில் இருந்த வழக்கை காரணம் காட்டித்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9–ந் தேதி இந்த 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்து நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் முடிவு மீது இன்றுவரை கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். நேற்று முன்தினம் இந்த 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன பெஞ்ச் முழுமையாக விசாரித்து தீர்ப்பு அளித்து விட்டதால், இனி விசாரித்து முடிவெடுக்கவேண்டிய எந்த புதிய அம்சமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. கவர்னர் முடிவெடுக்க இனி தடை ஏதுமில்லை. ஆக, இனி கவர்னரின் முடிவே இறுதியான தீர்ப்பாகும். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் 

இருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஒருதரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர் விடுதலை செய்யக்கூடாது என்றே கூறியிருக்கிறார்கள். வழக்கு மன்றங்களிலும் இதுவரை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வழக்குகள் போடப்பட்டு, இப்போது நீதிமன்றத்தில் இந்த பிரச்சினைக்கு முடிவு வந்துவிட்டது. இனி இந்த பிரச்சினைக்கு சட்டநிபுணர்களோடு கலந்து ஆலோசித்து முடிவு தெரிவிக்கவேண்டிய பொறுப்பு கவர்னரிடம்தான் இருக்கிறது. அதனால் தமிழக கவர்னர் இந்த 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது நிச்சயமாக தன்முடிவை விரைவில் அறிவித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது. 

Next Story