தமிழ் தெரிய வேண்டும்


தமிழ் தெரிய வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2019 10:30 PM GMT (Updated: 12 May 2019 5:07 PM GMT)

சமீப காலங்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள், தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளிலும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே கொடிக்கட்டி பறக்கிறார்கள்.

மீப காலங்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள், தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளிலும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே கொடிக்கட்டி பறக்கிறார்கள். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்று கூறி வருகிறார்கள். 

ரெயில்வேயில் கேங்மேன், கேட் கீப்பர், பாய்ண்ட்ஸ் மேன், புக்கிங் கிளார்க், டிக்கெட் பரிசோதகர், ஸ்டே‌ஷன் மாஸ்டர், கார்டு, லோக்கோ பைலட் போன்ற பல பணிகளில் இப்போதெல்லாம் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் ஏராளமாக பணிபுரிவது ரெயில்களில் பயணம் செய்யும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். சமீபத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த டிக்கெட் பரிசோதகரிடம் 2–ம் வகுப்பு பெட்டியில் இருந்த பயணி தமிழில் கேட்க, அவர் ‘கியா கியா’ என்று பதில் அளிக்க, இருவர் சொல்வதும் ஒருவருக்கொருவர் புரியாமல் இருந்திருக்கிறது. இதுபோன்ற நிலையால்தான் கடந்த வியாழக்கிழமை மதுரை ரெயில்வே கோட்டத்திலுள்ள திருமங்கலம் கள்ளிக்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே ஒரே வழித்தடத்தில் நேர் எதிரே ரெயில்கள் வந்திருக்கிறது. நல்லவேளையாக உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கள்ளிக்குடி ரெயில்வே ஸ்டே‌ஷன் மாஸ்டர் ஷிவ்சிங் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த ரெயில் நிலையங்களுக்கிடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பாசஞ்சர் ரெயிலுக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவை ஷிவ்சிங் மீனா கொடுத்து ரெயிலை புறப்பட செய்தார். அதே நேரத்தில் திருமங்கலம் ரெயில்வே ஸ்டே‌ஷன் மாஸ்டர் ஜெயக்குமார், மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரெயிலை புறப்பட செய்துவிட்டார். ஷிவ்சிங் மீனாவுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருவருக்கும் தெரிந்த மொழியில் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டது.

ஷிவ்சிங் மீனா பேசிய இந்தி ஜெயக்குமாருக்கு புரியவில்லை. ஜெயக்குமார் பேசியது இவருக்கு புரியவில்லை. ஆக, இருவருக்கும் தெரியாத மொழியில் தகவல் பரிமாற்றம் ஏற்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளையாக திருமங்கலம் ரெயில் நிலைய ஸ்டே‌ஷன் மாஸ்டர் ஜெயக்குமார் உடனடியாக தன் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரெயிலை சிக்னலை தாண்டிய நிலையிலேயே நிறுத்திவிட்டார். அடுத்த ரெயில் சிவரக்கோட்டை கேட்கீப்பர் உதவியுடன் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த நிலையை தவிர்க்கவேண்டுமென்றால், ரெயில்வேயில் அடிப்படை பணியாளர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள், பயணிகளோடு தொடர்புடைய அதிகாரிகளுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கவேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, வெளிமாநிலங்களில் பணி ஒதுக்கீடு செய்தால் அந்தமாநில மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அந்த மாநிலத்தில் பணிபுரியும்போது எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பணிபுரிய நியமிக்கப்பட்டால் ஒரு ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றி பெறவேண்டும். இதுபோன்ற விதிகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் ரெயில்வே, தபால் இலாகா, வருமான வரித்துறை, வங்கிகள், விமானநிலையம் மற்றும் மத்திய அரசாங்கதுறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வெளிமாநிலத்தவர்கள் எல்லோரும் பணி நியமன பயிற்சியின்போதே தமிழ் கற்றுக்கொள்ள செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழில் தேர்வு பெறவேண்டும், தகவல் பரிமாற்றமும் தமிழிலேயே இருக்கவேண்டும்.

Next Story